Published : 27 Feb 2025 02:43 PM
Last Updated : 27 Feb 2025 02:43 PM
சென்னை: 'தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்' என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பரிந்துரைத்ததை அடுத்து தமிழகத்தில் மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது. அவரது கருத்துக்கு திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீதர் வேம்புவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, “இதுதான் வலதுசாரி பிரச்சாரத்தின் புத்திசாலித்தனம். இந்தி படிப்பது ஒரு சிறப்புரிமை என்றும் அதைப் படிக்கும் குழந்தைகளுக்கு இது பல நன்மைகளைத் தரும் என்றும் அவர்கள் சித்தரிக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்தியை கட்டாயமாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது, மாறாக அது அவர்களுக்கு சுமையாக தான் இருக்கும்.
அருகாமையில் பள்ளி அமைந்திருப்பது, கட்டண அமைப்பு, பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களின் தரம், அந்த பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற கண்ணோட்டம், கூடுதல் பாடத்திட்டம் (extra curricular activities) போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் மக்கள் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் எந்தவித வேற்றுமையும் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரே மாதிரியான பாடத்திட்டங்களே வைத்து கட்டமைத்துக் கொண்டு வரப்பட்ட, சமச்சீர் கல்வியை கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே ஜெயலலிதாவின் அதிமுக அரசு அதை நிராகரித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு பாடக் கல்வித் திட்டம் தரம் தாழ்ந்தது என்ற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது. அதன் காரணமாகவே சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.” என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு பேச்சு: “இந்தியாவில் ஸோஹோ நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள், மும்பை, டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, டெல்லி, மும்பை, குஜராத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ளாததது எங்களுக்கு பெரிய குறைபாடாகும்.
இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் இந்தியை கற்றுக்கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20% என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலைப் புறக்கணித்து விட்டு, மொழியைக் கற்றுக்கொள்வோம். இந்தி கற்றுக் கொள்வோம்... என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT