Published : 27 Feb 2025 07:40 AM
Last Updated : 27 Feb 2025 07:40 AM
சேலம் / மதுரை: நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத் தில் பாமக பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் அன்புமணி பேசும்போது, “கல்வியை கட்டணமின்றி தர வேண்டியது அரசின் கடமை. ஆனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு மொழி என்பதுதான் பாமகவின் மொழிக் கொள்கை. பிற மொழிகளைக் கற்பதில் தவறில்லை, ஆனால் திணிக்கக் கூடாது. மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என்பதும் தவறு” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது: தொகுதி மறுவரையின்போது தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதைப் போக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தின் உரிமைகளை நாம் என்றும் இழந்துவிடக் கூடாது. எனவே, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்.
தமிழக பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு தரும் ரூ.2,500 கோடியை வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே?” என்றார்.
சீமான் பங்கேற்கவில்லை… நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மொழிக் கொள்கையில் மத்திய அரசு யார் பேச்சையும் கேட்காதபோது, அவர்களது பேச்சை நாம் எதற்கு கேட்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், பிற மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளும், தமிழகத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலும் தொகுதிகள் கிடைக்கும். இதை அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும். அதேநேரத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இவ்வாறு சீமான் கூறினார்.
புதிய தமிழகமும் மறுப்பு: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடங்காத நிலையில், தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று எந்த அடிப்படையில் முதல்வர் சந்தேகம் எழுப்புகிறார்? எனவே, அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது. மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாமல்போனதால், தொகுதி மறுவரையறை பிரச்சினையை முதல்வர் கிளப்பி வருகிறார்.
தமிழக மக்கள் மீது இரு மொழிக் கொள்கையை திணிப்பதை திமுக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT