Published : 27 Feb 2025 07:36 AM
Last Updated : 27 Feb 2025 07:36 AM

அன்பில் மகேஸ் Vs வானதி சீனிவாசன்: மும்மொழிக் கொள்கை ‘நோக்கம்’தான் என்ன? - கேள்விகளும் பதில்களும்

அன்பில் மகேஸ் | வானதி சீனிவாசன்

“மூன்றாவதாக ஒரு மொழியைப் படித்து மேலும் உயர்வதில் என்ன தவறு?” - வானதி சீனிவாசன் | “உங்களின் நோக்கம் மூன்றாவதாக ஒரு மொழியை கற்கவைப்பது இல்லை!” - அன்பில் மகேஸ்

“இன்னொரு மொழிப்போருக்கு தயாராவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பும் அளவுக்கு தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் தமிழகத்தில் அனலடிக்கின்றன. இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எழுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும் தொகுப்பாக இங்கே...

முதலில், வானதி சீனிவாசனின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் அன்பில் மகேஸ்: மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றும் மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகள் அழிந்து போய்விடவில்லை. அப்படி இருக்க, தமிழகத்தில் மட்டும் தமிழ் மொழி எப்படி அழிந்து போகும்?

“19 மொழிகள் பேசப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலம், மும்மொழிக் கொள்கையை ஏற்ற பின்பு, இந்தி பேசும் மாநிலமாக சுருங்கிவிட்டது. இதே நிலைதான் பிஹார், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டு இருக்கிறது. பாஜக ஆளும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அவர்களின் தாய்மொழி கட்டாயம் எனச் சட்டமாக்கப்பட்டுள்ளது. 11 பிராந்திய மொழிகளின் பயன்பாடு அருகி வருவதற்கு இந்தி திணிப்புதான் காரணம் என தரவுகள் சொல்கின்றன.

அதோடு, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்களில், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவில்லை. இந்த ஆபத்துகளை உணர்ந்துதான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை அண்ணா கொண்டு வந்தார். கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசும் அதனை பின்பற்றுகிறது.”

இருமொழிக் கொள்கையே போதும் என்பதில் உறுதியாக இருந்தால், அதனை தனியார் பள்ளிகளிலும் அமல்படுத்தும் துணிச்சலான முடிவைத் தமிழக அரசு எடுக்குமா?

“தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது. தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்கிற வகையில், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. 1,846 சிபிஎஸ்இ மற்றும் பிறவாரியப் பள்ளிகளில் மட்டுமே இந்தி விருப்பமொழிப் பாடமாக உள்ளது. அதற்காக இந்தி இங்கு தடை செய்யப்பட்ட மொழி அல்ல. தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபாக்கள் சுதந்திரமாக இயங்கத்தானே செய்கின்றன.”

திராவிட மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை மூன்றாவது மொழியாக கற்க திராவிட மாடல் அரசு வழிவகை செய்யலாமே..?

“வட இந்தியா​வில் எந்த மாநிலத்​தில், எத்தனை பள்ளி​களில் திராவிட மொழிகளை மூன்​றாவது மொழி​யாகக் கற்றுக் கொடுக்​கிறார்​கள்? உங்களின் நோக்கம் மூன்​றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்​கொள்ள வைப்பது இல்லை; இந்தி பேசாத மாநிலங்​களில் இந்தியை வலிந்து திணிப்​பது​தான். அ

தோடு, ஒரே வகுப்​பில் படிக்​கும் 50 மாணவர்​களில் 10 மாணவர்கள் மலையாளம், 10 பேர் தெலுங்கு, 10 பேர் கன்னடம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுக்​கொள்ள விருப்பம் தெரி​வித்​தால், அத்தனை ஆசிரியர்களை ஒரு பள்ளி​யில் நியமிக்க நடைமுறைச் சாத்​தி​யங்கள் இருக்​கின்​றனவா?

இந்தி பேசாத மாநிலங்​களில் இந்தி கற்பிக்க ஆசிரியர்களை நியமிப்​ப​தற்காக ரூ. 50 கோடி ஒதுக்கிய ஒன்றிய அரசு, மற்ற மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமிக்க ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்க​வில்லை. தமிழ்​நாட்​டில் கேந்​திரிய வித்​யாலயா பள்ளி​களில், ஒரு தமிழ் ஆசிரியர் கூட நியமிக்கப்​பட​வில்லை. இதையெல்​லாம் வானதி அக்கா கேள்வி கேட்க முன்​வர​வில்​லை​யே?”

திமுக ஆதரவுடன் யுபிஏ ஆட்சி நடந்தபோது கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், 2019-ல் பிரதமர் மோடி, அதனை விருப்பமொழி என்று மாற்றியதை மறுக்க முடியுமா?

“யுபிஏ ஆட்யில், நீங்கள் எங்கள் பாலிசியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டுமென யாரும் ‘பிளாக் மெயில்’ அரசியல் செய்யவில்லை. ஆனால், பாஜக அரசு இப்போது மிரட்டிப் பார்க்கிறது. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறிப்பிட்டது போல, ‘தாலாட்டும், ஒப்பாரியும் இல்லாத மொழிகளை’ எங்கள் மீது திணிப்பதற்காக, 43 லட்சம் மாணவர்களின் கல்வி நிதியை நிறுத்திவைத்து, கல்வியில் நீங்கள் (பாஜக) அரசியல் செய்கிறீர்கள்.”

புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடிப்பதால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை உணர்கிறீர்களா?

‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்​பட்​டதைப் போல, வளர்ச்சி பாதிக்​காதா என்று கேட்பது கேலிக்​கூத்தாக உள்ளது. தேசிய சராசரியைவிட கல்வி​யில் சிறந்து விளங்கும் தமிழ்​நாட்டை மிரட்​டிப் பணிய வைத்து​விடலாம் என்று ஒன்றிய அரசு கருதுகிறது. துணை முதல்வர் உதயநிதி குறிப்​பிட்டது போல, “இது நீட்டும் இடத்​தில் எல்லாம் கையெழுத்​துப் போடும் அடிமைகள் அரசு அல்ல; மக்கள் நலனுக்காக உழைக்​கும் முதல்வர் முத்து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் நடத்​தும் அரசு.”

இனி, அன்பில் மகேஸின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் வானதி சீனிவாசன்: தேசியக் கல்விக் கொள்கை 2020-ல், கல்விக்கு ஜிடிபி-யில் 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் 3 சதவீதம்கூட ஒதுக்காமல் இருப்பது ஏன்?

“தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கல்விக்காக நிர்​ண​யிக்​கப்​பட்ட 6 சதவீத உயரிய இலக்கை அடைய மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மிக அவசி​யம். இந்நிலை​யில் 2020-21 நிதி​யாண்​டின் படி, கல்விக்கான மொத்தச் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்​தி​யில் 4.64 சதவீதம் அதிகரித்​துள்ளது. குறிப்​பாக, கடந்த ஆண்டு கல்விக்காக நமது மத்திய அரசு செலவழித்த மொத்த தொகை​யானது, கடந்த யுபிஏ ஆட்சியை விட கிட்​டத்​தட்ட 50 சதவீதம் அதிகம்​.”

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பிரதமர் ஆன பின்பு மாநில உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டுவது ஏன்?

“மாநில அரசுகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடி. 2025-ல், 112 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றும் திட்டம், 2023-ல் மத்திய நீர்வள அமைச்சகம் வாயிலாக அனைத்து மாநில அமைச்சர்களையும் ஒருங்கிணைத்து தண்ணீர் மாநாட்டை நடத்தியது, கூட்டாட்சி முறையை மேம்படுத்தும் வகையில், நிதி ஆயோக், மாநில நிதி அமைச்சர்களை உள்ளடக்கி ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற அமைப்புகளை உருவாக்கியதும் அவரே. ஆனால், மாநில சுயாட்சியைப் பற்றி பலமுறை பேசிவிட்டு, 2024 -ல் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை அறிவாலய அரசு புறக்கணித்ததுதான் வரலாறு.”

தமிழ்நாடு என்ற பெயர் இல்லாமல் ஒன்றிய நிதி நிலை அறிக்கை வெளியீடு, சம்ஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, திட்டங்களை செயல்படுத்தினால் தான் நிதி என மிரட்டல் விடுப்பது இதையெல்லாம் கண்டித்து தமிழக பாஜக-வினர் குரல் எழுப்பியது கூட இல்லையே..?

“சம்ஸ்கிருத மொழிக்கு என எந்த மாநில அரசும் இல்லை. அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் இல்லை. அதனால் மத்திய அரசு அந்த பழமையான மொழியை அழியாமல் பாதுகாக்க, பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இந்த புரிதல் இல்லாமல் பேசுவதன் பின்னணியில் வெறும் வெறுப்பரசியல் மட்டுமே உள்ளது.”

இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேர்வோரின் எண்ணிக்கையில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் முதலிடம் பெற்றிருக்கும் போது, மும்மொழிக் கொள்கை தேவையா?

“இருமொழி கொள்கையில் படித்தவர்கள் மட்டுமல்ல... பிற மாநிலங்களில் மும்மொழி கொள்கையில் படித்தவர்களும் உலகளவில் பல சாதனைகள் புரிந்துள்ளனர். அதோடு, இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள், பல சாதனைகளைப் படைக்கும் திறன் கொண்டவர்களாக உள்ள நிலையில், தங்கள் விருப்பத்தின் பேரில் மூன்றாவதாக ஒரு மொழியை படித்து மென்மேலும் உயர்வதில் என்ன தவறு?”

தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை, ஒன்றிய அரசிடம் முன்வைத்து, ஏதாவது திட்டங்களைப் பெற்றுத்தந்துள்ளதா தமிழக பாஜக?

“2014-ம் ஆண்டு முதல், 2024 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்காக ரூ.10.76 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது. கோவை பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி தொழிற்பேட்டை, விருதுநகர் ஜவுளி பூங்கா, 4,100 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை விமான நிலைய விரிவாக்கம் என தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அதனை கண்மூடித்தனமாக திமுக எதிர்த்து வருகிறது. தமிழக எம்பி-க்கள் பாதி நேரம் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து விடுவதால், தமிழக பாஜக தான் மக்களின் தேவைகளை எடுத்துக் கூறி வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x