Published : 26 Feb 2025 07:05 AM
Last Updated : 26 Feb 2025 07:05 AM
மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் இண்டியா கூட்டணித் தலைவர்களோடு இணங்கி போக அவசியமில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
வியட்நாமில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய விசிக தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவை ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்ற முயற்சி. இந்தி ஒரு பிராந்திய மொழி என்பதை மறந்து பேசுகின்றனர். அதை பிற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது.
பிஎம்ஸ்ரீ பள்ளிகளில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் இந்தி பேசுவோர் மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இரு மொழியை தான் கற்கின்றனர். ஆனால், பிற மொழியை பேசக் கூடியவர்கள் தாய்மொழி, ஆங்கிலத்தோடு இந்தியையும் கட்டாயம் கற்க வேண்டும் என்ற முயற்சியை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மூன்றாவது மொழியை கற்பது தனிநபர் விருப்பம். தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடமிருக்காது.
இதை இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்ள வேண்டும். கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களது கருத்துக்கும் மொழிக் கொள்கையில் இணங்கி போக வேண்டியதில்லை. காங்கிரஸ் ஆட்சியிலேயே இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அப்போதும் எதிர்த்திருக்கிறோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இந்தியை திணித்தாலும் எதிர்ப்போம். இதில் எப்போதும் உறுதியாக இருப்போம்.
அண்ணாமலை விதண்டாவாதம் பேசுகிறார். அவர் தனது அரசியலை நிலைநாட்ட விரும்புகிறார். கர்நாடகத்தில் இருந்தால் தன்னை கன்னடன் என்பார், தமிழகத்தில் இருந்தால் தமிழர் என்பார், ஆர்எஸ்எஸ் கூடாரத்துக்கு போனால் இந்து என்பார். இப்படி பல வேடம் போடக் கூடியவர் அண்ணாமலை. அவரது பேச்சுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT