Published : 25 Feb 2025 09:22 PM
Last Updated : 25 Feb 2025 09:22 PM
கோவை: “மும்மொழிக் கொள்கையில் தோற்றுவிட்டதை மடைமாற்ற, தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆதாரம் இல்லாமல் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாடாளுமன்றம், சட்டப்பேரவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடரப்பாக முதல்வர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என முதல்வருக்கு யாரோ கூறியுள்ளனர். அது யார் என்று எனக்கு தெரியாது.
மக்களவையில் 543 இடங்கள் உள்ள நிலையில் அது 800-க்கும் மேல் அதிகரிக்கும் என்றும், தமிழகத்துக்கு 22 இடங்கள் கிடைக்க வேண்டும், ஆனால் 10 இடங்கள்தான் கிடைக்கும் என யாரோ கூறியுள்ளார். மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு என எங்கும் கூறாத நிலையில், எந்த அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசியுள்ளார் எனத் தெரியவில்லை. மக்களவை தேர்தலின்போது ஏற்கெனவே இது தொடர்பாக காங்கிரஸ் புரளி பரப்புகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இன்று தமிழக அரசு மும்மொழி கொள்கையில் தோற்றுவிட்டனர். அதை மடைமாற்ற வேண்டும். சங்கரன் கோயில் பகுதியில் இந்திக்கு பதில் ஆங்கிலத்தை கருப்பு மை கொண்டு திமுகவினர் மறைத்துள்ளனர். எனவே, தோல்வியை மடைமாற்றவே தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த கூடாது. 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை அன்றைய பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். யாருக்கும் பிரச்சினை ஏற்படக்கூடாது என ஒத்திவைத்தார்.
மறுசீரமைப்பு தவிர்க்க முடியாது. தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் செயல்படுத்த வேண்டியது எங்கள் பொறுப்பு. முதல்வர் ஸ்டாலின் தனக்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து யார் தகவல் கூறியது என தெரிவித்தால் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும்,” என்று அண்ணாமலை தெரிவித்தார். வாசிக்க > “தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் அபாயம்!” - முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT