Published : 25 Feb 2025 10:27 AM
Last Updated : 25 Feb 2025 10:27 AM

“திமுக நிர்வாகத் திறமையின்மையை திசைதிருப்ப லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை” - இபிஎஸ் சாடல்

சென்னை: திமுக நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த “ஊழல் திலகங்களான” இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சினைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை”.

அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் அதிர்ச்சியால் விளைந்த எதிர்வினை தான் சட்டமன்ற உறுப்பினர் அர்ச்சுனன் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.

இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் கே. அர்ச்சுனன் திறம்பட செய்து வரும் பணியை தடுக்கும் விதமாக ,லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது,

தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும்
துஞ்சாது எதிர்கொள்வோம். 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x