Last Updated : 24 Feb, 2025 06:48 PM

14  

Published : 24 Feb 2025 06:48 PM
Last Updated : 24 Feb 2025 06:48 PM

ஜெயலலிதா என்னும் ஆளுமையை எந்த அளவுக்கு ‘மிஸ்’ செய்கிறது தமிழக அரசியல்?

கோப்புப் படம்

பிப்.24... இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த தினம். தமிழக அரசின் சார்பில் மரியாதை, அதிமுகவின் பிரம்மாண்ட கொண்டாட்டம், அதிமுக உரிமை மீட்புக் குழு, அமமுக, இப்போது செங்கோட்டையன் என அதிமுகவின் அவதாரங்களாக புதிது புதிதாக உதயமாகும் பல்வேறு தரப்பினரின் பெருமிதப் பேச்சுகள். இனி அரசியலுக்கு வரப்போவதே இல்லை என்று அறிவித்துவிட்ட ரஜினிகாந்த் கூட போயஸ் கார்டன் ஜெ. இல்லத்தில் அஞ்சலி செலுத்தி அளித்த பேட்டி, இன்னும் கட்சி கடந்தும், துறைகள் கடந்தும் பதிவாகும் ஜெயலலிதாவுக்கான புகழஞ்சலிகளும், சமூக வலைதள விதந்தோதலும், விமர்சனங்களும் ஜெயலலிதா இன்னமும் தமிழக அரசியலில் நினைவுகளால் நிலைத்திருக்கிறார் என்றே புரிந்துகொள்ளச் செய்கிறது. மேலும், ஜெயலலிதா எனும் ஆளுமையை தமிழகம் ‘மிஸ்’ செய்கிறதோ என்ற எண்ணத்தையும் எழச் செய்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்... - ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பரில் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின் முதல்வர் பதவி வெகு எளிதாக ஓபிஎஸ் கைகளுக்குச் சென்றாலும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதிமுக ஜெயலலிதா எப்போதும் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ராணுவக் கட்டுப்பாடோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கேள்விக்குறியாக்கியது. ஒரு கட்டத்தில் அந்த கேள்விக்குறிகூட மறைந்து கேலிக்கூத்தானது. ஓபிஎஸ் நீக்கம், இரு அணிகள் உருவாக்கம், இபிஎஸ்-க்கு முதல்வர் பதவி, சசிகலா சிறைவாசம், மீண்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு என வரிசைகட்டியது சலசலப்புகள். சற்றே மீண்டெழத் தொடங்கிய வேளையில் மீண்டும் அதிகாரப் பகிர்வில் சர்ச்சை ஏற்பட்டு இபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவினை, அதிமுக அலுவலகம் சூறை, உள்ளடி வேலைகள் என பல பிரச்சினைகள் என்ற நிலைக்கு வந்துள்ளது அதிமுக.

அதேபோல் தமிழக அரசியல் களத்திலும் புதுப்புது கூட்டணிகள், சில பல சமரசங்கள், ஜெயலலிதா என்ற அடையாள பிம்பத்தையே அதிமுகவிடமிருந்து கைப்பற்ற முயற்சி, அதிமுக என்றால் ஜெயலலிதா என்ற பிம்பத்தை உடைக்க கட்சிக்குள்ளேயே முயற்சி என்ற குற்றச்சாட்டு என பல்வேறு போக்குகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஜெயலலிதா இல்லாததுஅதிமுகவுக்கு என்ன இழப்பு, ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலுக்கு என்ன இழப்பு என இரண்டுவிதமாக அணுகுவோம்.

இரண்டு சம்பவங்களில் இருந்து தொடங்குவோம்.. - 2024 பிப்ரவரியில் பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவுவிழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்தது. மிகப் பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவர்களது ஆட்சிக்கு புகழாரம் சூட்டி மோடி பேசினார். “தமிழக வருகையின்போது, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார். அவர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல. எம்ஜிஆர் போலவே ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார்” என்று புகழ்ந்து பேசினார்.

2-வது சம்பவம் கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி தீவிர இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் தமிழகத்தில் களைகட்டியிருந்த நேரம் அது. அப்போது கோவையின் பிரதானப் பகுதியில் மாலை நேரத்தில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அதில் பெரும்பாலோனோரின் கைகளிலும் ஜெலலலிதா, எம்ஜிஆர் பதாகைகள் இருந்தன. அதிமுக பிரச்சாரம் போல என நினைத்திருந்த எனக்கு திடீரென அங்கு வந்த அண்ணாமலையின் காரும் அதிலிருந்து இறங்கிவந்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோதும் தான் அது பாஜகவின் பிரச்சாரம் என்றே புரிந்தது.

இந்த இரண்டுமே தமிழக மக்களின் மனங்களில் இடம்பெற பாஜக கையிலெடுத்த அபார உத்தி. ஒரு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ‘மோடியா, இல்லை இந்த லேடியா?’ என்று நேரடியாக சவால்விட்டவர்தான் ஜெயலலிதா. ஆனால் அவரையே தனக்கான அரசியல் பக்கபலமாக தூக்கிக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் இறங்கியது பாஜக. ஒரு பக்கம் அதிமுகவை எதிர்க்கும் திமுக கூட்டணி, மறுபக்கம் வலுவிழந்து சின்னத்துக்கும், கட்சிக்கும், பதவிக்கும் அடித்துக் கொள்ளும் அதிமுகவின் அடுத்தடுத்த முகங்கள். இதற்கிடையில், அதிமுக அனுதாபிகளுக்கு அல்லது அதிமுக பூசல்களால் அக்கட்சியின் மீது அதிருப்தியடைந்தவர்களுக்கு, “எம்ஜிஆர், ஜெயலலிதா துணை” என்று தேர்தல் அரசியலுக்கு பிள்ளையார் சுழிபோட்டது பாஜக. திமுக பிடிக்காதவர்களுக்கும், அதிமுக சர்ச்சைகளை விரும்பாதவர்களுக்கும் பாஜகவின் அந்த என்ட்ரி ஆக்கபூர்வ மாற்றாக தெரிந்தது.

அதன் பலனையும் பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் ஓரளவுக்கு அறுவடை செய்தது, வாக்கு சதவீதத்தின் அடிப்படையில். ஒரு தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிக்கு வலுவான தலைமை இல்லாமல் போவதும், உட்கட்சிப் பூசல்கள் மிகுவதும் அந்தக் கட்சியின் அந்தஸ்தை வெளியில் இருந்து வரும் இன்னொரு கட்சி வெகு சுலபமாக ஸ்வீகரித்துக் கொள்ள முடியும் என்பதற்கு அது சிறந்த சாட்சியானது. அதனால்தான் தமிழக பாஜக தலைவர் தனது தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் ‘இன்னும் சில காலத்தில் அதிமுக என்ற கட்சியே இருக்காது’ என்று அடித்துக் கூறி அதை மக்களின் மனங்களில் நிறுவ முயன்றார்.

பாஜக இவ்வாறாக இயங்க, திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகள் எப்போதும் போல் அதிமுகவையே பிரதான எதிர்க்கட்சியாக கருதி இயங்குகின்றன. நாதக, தவெக தொடர்பான கேள்விகளையெல்லாம் ஆளும் கட்சியும் அதன் தலைமையில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற தொனியிலேயே இயங்குகின்றனர். திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தின் அடையாளம் என்பதை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதற்கான அரசியல் அது. அந்த அரசியல் சூட்சமத்தை அதிமுகவும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எம்ஜிஆருக்குப் பின் இரண்டாக பிளவுபட்டுக் கிடந்த அதிமுகவை ஒன்றிணைத்து வலுவாகக் கட்டியெழுப்பிய ஜெயலலிதா அரசியல் சாதுர்யங்கள் வீணாகிப் போகும்.

“அதிமுக மாநில அரசியலில் பிழைத்திருக்க உடனடித் தேவை கட்சி ஒருமைப்பாடு, ஒற்றைத் தலைமையோ இரட்டைத் தலைமயோ உள்கட்சிப் பூசல்களோ எதுவாயினும் பிளவுபடாமல் எதிர்கொள்ள வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததாலும் அவர் தனக்குப் பின்னர் இவர் தான் அரசியல் வாரிசு என்று அடையாளப்படுத்தி, வளர்க்காது அனைவரையும் கட்டளைகளுக்குப் பணிபவர்களாகவே மட்டுமே பழக்கியதாலும் நேர்ந்த விணை இது” என்கிறார் அரசியல் நிபுணர் ஒருவர்.

தமிழக அரசியலில்... - அதிமுக எனும் அரசியல் கட்சிக்கான சவால்கள் இப்படியென்றால் ஜெயலலிதாவை தமிழக அரசியல் களம் எப்படியெல்லாம் இழந்து நிற்கிறது என்று பார்த்தால் அதில் அவரது அரசியல் ஆளுமையை பிரதானமாக சுட்டிக்காட்டலாம்.

இந்திய அரசியலுக்கு கூட்டாட்சிதான் ஆன்மா என்றால், அந்த ஆன்மாவை உயிர்ப்புடன் வைப்பவை பலம் பொருந்திய மாநிலக் கட்சிகள் என்றால் அது மிகையாகாது. தேசிய அளவில் ஒரு வலுவான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால், அதற்கு வலுவான மாநிலக் கட்சிகளின் துணை தேவை என்ற நிலையே இருந்தது. 2014-ல் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பின்னர் அந்த இந்திய அரசியன் அந்தத் தனித்துவ தன்மை பெருமளவில் பிசுபிசுத்துப் போயிருக்கிறது. இப்போதெல்லாம் மாநிலத்தில் பிரச்சினையின்றி ஆட்சி செய்ய வேண்டும் என்றால் மத்தியில் இருக்கும் அரசுக்கு ஜால்ரா’ போட வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. அதை பாஜகவே நீடித்த வளர்ச்சிக்கு ‘இரட்டை இன்ஜின்’ அரசை தேர்வு செய்யுங்கள் என்று மறைமுகமாக பிரச்சாரம் செய்கிறது. அப்படி இல்லாத மாநில அரசுகள் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இது முன்பும் இருந்தது. ஆனால், அதன் வீச்சு சற்று குறைவு என்று சொல்லலாம். அதனாலேயே தன் மீதான பல்வேறு வழக்கு நெருக்கடிகள் இருந்தாலும் கூட ஜெயலலிதா மத்தியில் இருந்த அரசுக்கு எதிர்ப்பு காட்ட சற்றும் தயங்காமல் இயங்க முடிந்தது. அண்ணா, கருணாநிதி என எல்லோரும் மாநில உரிமைகளுக்காக முழங்கியவர்கள்தான். அந்த வரிசையில் எந்த இடத்திலும் மாநில உரிமைக்காக வலுவான குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. தனது அரசியல் குருவான எம்ஜிஆரையும் மிஞ்சி சமரசமின்றி துணிச்சலான முடிவுகளை எடுத்து மத்தியில் இருப்பவர்களை திக்குமுக்காட வைத்தவர் ஜெயலலிதா. காவிரி பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, இந்தி திணிப்பு, முல்லைப் பெரியாறு எனப் பல்வேறு பிரச்சினைகளிலும் மாநில உரிமைக்காக கர்ஜித்தவர் ஜெயலலிதா.

இரட்டை இன்ஜின் அரசு என்று புதுவித அரசியல் போக்கை பாஜக புகுத்தி வரும் சூழலில், ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாமல் போனது தமிழக அரசியல் களத்தில் பாஜக தன்னையும் முக்கிய கட்சியாக உருவாகிக் கொள்ள ஒரு மிகப் பெரிய களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் மாநிலத்தில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியே இருக்காது. தமிழக அரசியல் களத்துக்கு அதிமுக, திமுகவுடன் இன்னும் பிற மாநிலக் கட்சிகளின் இருப்பு பலமாக இருப்பது மிகமிக அவசியம். அந்த கட்டமைப்பு சிதையாமல் இருக்க பெரும் பங்கு வகித்தவர் ஜெயலலிதா எனலாம்.

மாநிலக் கட்சிகள் எவ்வளவு ஸ்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு சந்திரபாபு நாயுடு தொடங்கி மம்தா பானர்ஜி வரை இன்ஸ்பிரேஷன்களை கடத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை அவ்வப்போது பிற மாநில முதல்வர்கள் வந்து சந்தித்துச் செல்வது ‘ரொட்டீன் அரசியல்’ போல் நிகழ்ந்து கொண்டிருக்கும். மத்தியில் வரும் ஆட்சிக்கு மாநிலங்கள் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசியல் ஆளுமைகளை தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பவராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அந்தப் போக்கு தமிழக அரசியலில் வழக்கொழிந்ததுபோல் இருக்கிறது.

ஜெயலலிதா எனும் ஆளுமையை தமிழக அரசியலும், அதிமுக கட்சியும் இதுபோன்ற சில புள்ளிகளில் மிஸ் செய்கிறது என்பது உண்மைதான். இந்தச் சூழலில் இன்றைய அரசியல் களம் ஜெயலலிதா இல்லாமல் எப்படி இருக்கிறது என்று இளம் வாக்காளர் ஒருவரிடம் கேட்டபோது, “ஜெயலலிதா என்றவுடன் ‘பவர்’ என்ற பதம் தான் நினைவுக்கு வரும். அவருடைய குரல், அவருடைய தோற்றம், அவர் தன்னைத்தானே கையாளும் மிடுக்கு எல்லாம் எனக்கு பிடித்தமானவை. அவர் அதிமுகவினரை எல்லாம் அடிமையாக நடத்தினார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு பெரிய கட்சியை கட்டுக்கோப்பாக வைப்பது அதுவும் அரசியலில் நிலவும் ஆணாதிக்கத்துக்கு மத்தியில் அதை அவர் லாவகமாக செய்து காட்டியது என்னை வியக்கவைக்கும்.

கடைசியில் அவர் மீதான ஊழல்கள் என்னுள் பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும் கூட அவரை ஓர் ஆளுமையாகவே கருதுகிறேன். ஒருவேளை அவர் நலம்பெற்று தனது ஊழல் கறையை துடைக்கும்படி இன்னொரு இன்னிங்ஸ் செயல்பட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் இன்றும் இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் ஜெயலலிதா ஒப்பீட்டு அளவில் சற்றே ஒருபடி மேலே சிறப்பாக செயல்பட்டாரோ என்று தற்போதைய நிலவரங்கள் என்னை நினைக்க வைக்கிறது. இப்போது அவர் இருந்திருந்தால் மாநில, தேசிய அரசியலில் ஒரு ஆல் ரவுண்டராக இருந்திருப்பார். பவர் ப்ளே செய்திருப்பார் என்று தோன்றுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x