Last Updated : 24 Feb, 2025 03:31 PM

 

Published : 24 Feb 2025 03:31 PM
Last Updated : 24 Feb 2025 03:31 PM

“வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துகிறது” - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

சென்னை: “மலைவாழ் மக்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால், பட்டா பெற முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்”, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், நில உரிமையும், பழங்குடி மக்களின் இனச்சான்று, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிடக் கோரி, ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று (பிப்.24) நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லி பாபு தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஆர்.தமிழரசன், துணை செயலாளர் எம்.அழகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், “தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் நிதியை ஒதுக்குவதில்லை. மேலும், ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும், அக்கறையின்மையும் தான் காரணம்.

ஆதி திராவிடர் நல பள்ளிகளின் மாணவர் விடுதிகள் மிகவும் மோசமாக உள்ளன. தண்ணீர், கழிப்பறை வசதிகள் கிடையாது, எப்போது இடிந்து விழும் என தெரியாத அளவுக்கு சேதம் அடைந்த கட்டிடங்களில் செயல்படுவதோடு மற்றும் 50 சதவீத ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காவலாளிகள் கிடையாது. இதனால், பெண் பிள்ளைகளை பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர். பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் விடுதிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஒதுக்கப்படும் நிதி முழுமையாக செலவழிக்கப்படுகிறதா? என்பதை அரசு தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

வன உரிமைச் சட்டத்தின் கீழ், இதுவரை 15,442 மலைவாழ் குடும்பங்களுக்கு மட்டுமே வனஉரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 17 ஆண்டுகள் ஆகிறது. இச்சட்டத்தைக் கண்காணிக்க தமிழக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு உள்ளது.

ஆனால், இக்குழு இதுவரை கூட்டப்படவில்லை. இதனால், இச்சட்டம் ஆமை வேகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இச்சட்டம் பழங்குடியின மக்களின் வன மற்றும் நில உரிமையை அங்கீகரிக்கும் சட்டம் ஆகும். இச்சட்டத்தால் பயன்பெறும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தமிழக அரசு பட்டா வழங்க வேண்டும்.மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை எஸ்சி, எஸ்டி சட்ட இடஒதுக்கீட்டின் படி நிரப்ப வேண்டும்.

கேரள மாநில அரசு ஒரு குடும்பம் கூட வீடு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அங்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. வீடு இல்லாமல் இருந்த 95 சதவீதம் குடும்பத்துக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. குறைந்த வரி வருவாய் உள்ள கேரளாவில் இத்தகைய சாதனை செய்யும் போது, அதிக வரி வருவாய் உள்ள தமிழகத்தில் ஏன் இத்தகைய ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாது? மக்கள் நாகரிகமாகவும், கண்ணியமாகவும் வாழ்வதற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு தேவை. அந்த வகையில், சொந்த வீடு இல்லாத அனைத்து பழங்குடியின மக்களுக்கும் வீடும், பட்டாவும் வழங்க வேண்டும்,” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x