Published : 24 Feb 2025 12:23 PM
Last Updated : 24 Feb 2025 12:23 PM
சென்னை: “அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம். ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே தொடர் தோல்விக்கு காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடுமையாக சாடினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, ஒபிஎஸ் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஜெயலலிதா இருந்தவரை கட்சியை எந்தளவுக்கு நிலைநிறுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு பின்னால் நடைபெற்ற அரசியல், சூது, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் இதெல்லாம் யாரால் அரங்கேற்றப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதனிடையே நடைபெற்ற 11 தேர்தல்களிலும் கழகம் தோல்வியைத்தான் சந்தித்தது. இதற்கெல்லாம் காரணம், ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்கள்தான். அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
வசந்த காலமாக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை, இன்றைக்கு மாற்றி இருக்கிறவர்கள் யார் என்று உங்களுக்கே நன்றாகவே தெரியும். அவர்களுடைய பெயர்களை நான் வருங்காலத்தில் தவிர்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. பொதுமக்களும் அதையே நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்கள் விரும்புவது இரு மொழிக் கொள்கை தான். ஜெயலலிதா அதை தீர்மானமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். எங்களுடைய நிலைப்பாடும் இருமொழிக் கொள்கை தான். மாநில நிதியாக இருந்தாலும் சரி, மத்திய நிதியாக இருந்தாலும் சரி அது மக்களுடைய வரிப் பணம். இது தொண்டர்களின் இயக்கம்.
தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பதுதான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதற்காக தான் நாங்களும் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். நமது தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை நமது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT