Published : 23 Feb 2025 07:58 PM
Last Updated : 23 Feb 2025 07:58 PM
பொள்ளாச்சி: மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் பூசி அழித்த திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கல்விக்காக மத்திய அரசு தர வேண்டிய நிதியை தர மறுத்துள்ளது. இது இந்தியை திணிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு சில இடங்களில் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று காலை திமுகவின் சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நகரமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல், முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை உள்ளிட்ட ரயில் நிலையத்துக்கு சென்ற திமுகவினர், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள ரயில் நிலைய சந்திப்பு பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழியில் பொள்ளாச்சி என எழுதப்பட்டு இருந்த பெயரில் இருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் மூலம் அழித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீஸார், பெயர் பலகையில் இந்தி எழுத்துகள் மீது பூசப்பட்ட கருப்பு பெயிண்டை அகற்றி தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் பொள்ளாச்சி சந்திப்பு என்னும் பெயர் தெரியும்படி செய்தனர்.
இது குறித்து கூறிய பொள்ளாச்சி ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. உன்னிகிருஷ்ணன், "பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இன்று காலை நேரத்தில் ஓரே ஒரு போலீஸார் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அதனால் அவர்கள் பெயிண்ட் பூசி அழிப்பதை தடுக்க முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு சட்டம் 166,147,145 (ஆ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT