Published : 22 Feb 2025 06:22 PM
Last Updated : 22 Feb 2025 06:22 PM
நாமக்கல்: “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்தியா 100-வது சுதந்திர தினம் கொண்டாடும் சமயத்தில் இந்தியா வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்பதற்கு அடித்தளமாக இருக்கும் வகையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் மத்தியில் இருந்த சமயத்தில் ரூ.800 கோடி மட்டும் ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு ரூ.6,500 கோடியை ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழுக்கும், தமிழ் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்தான் தொன்மையான மொழி என வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி செல்லும் சமயங்களில் வலியுறுத்துகிறார்.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன. அதனால் டெல்லியில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். தமிழகத்தில் விரைவில் டபுள் இன்ஜின் சர்க்கார் வர உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் தாய் மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை. இந்தி பிரச்சார சபாவில் அதிகளவில் சேர்ந்து இந்தி படிக்கின்றனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தி உள்ளது. ஆனால், அரசுப் பள்ளியில் 3-வது மொழியாக மாணவர்கள் இந்தி படிக்க முடியாதபடி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அரசியல் காரணங்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வராமல் உள்ளது. ஒவ்வொரு நிதிக்கும் ஒரு விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை ஏற்றால்தான் நிதி கிடைக்கும். எனவே, மக்களை திசை திருப்பாமல், மாணவர்களின் கல்வியில் விளையாடாமல், அரசியல் செய்யாமல் 3-வதாக, ஒரு மொழியைத்தான் கொண்டுவர சொல்கிறார்கள். இந்திய மொழிகளில் ஒன்றைத்தான் 3-வது மொழியாக கொண்டு வரச் சொல்கின்றனர். அது இந்தி மொழிதான் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. ஒரு குழந்தை எந்த மொழி, எத்தனை மொழி படிக்க வேண்டும் என்பது குழந்தையின் உரிமை. இதை எதிர்ப்பதற்கு முதல்வருக்கு என்ன அதிகாரம் உள்ளது. எனவே, இந்த பாகுபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்தினார். பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பாஜக மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஸ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான், 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும், நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம். 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமூகம் செல்லக் கூடிய பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் விவரம்: “ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT