Published : 22 Feb 2025 03:53 PM
Last Updated : 22 Feb 2025 03:53 PM
மதுரை: “இந்தி மொழியை வைத்து பாஜக அரசியல் செய்கிறது” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி கூறியுள்ளார்.
மதுரை தவிட்டு சந்தையில் உள்ள மதிமுக நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இன்று (பிப்.22) மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. தமிழகத்துக்கு தேவை இருமொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்பதுதான் பிரச்சினை.
அண்ணாமலை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்கிறார். பாஜகவை தவிர அனைத்து இயக்கங்களும் தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கைதான் தேவை என்கின்றனர். இருமொழிக் கொள்கையால் ஆங்கிலம் கற்றதால்தான் தமிழக மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் மாநிலங்களில் பாஜக தலைவர்கள் ஆங்கிலம் தேவையில்லை என்றும், நாட்டில் ஆங்கிலமே இருக்கக் கூடாது என்கின்றனர்.
மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே கற்க வேண்டும் என ஏன் திணிக்கிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்வது பாஜக மட்டுமே. இந்தியை திணிப்பதால் எதிர்க்கிறோம்.
இந்தியாவில் அதிகமாக பாலியல் வன்கொடுமை நடக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம், டெல்லி. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை விகிதம் குறைவாக உள்ளது. அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மதவாத அரசியலால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாஜகவை எதிர்க்கும் வல்லமை திமுகவுக்கு உள்ளதால் திமுக கூட்டணியில் இருக்கிறோம். அமெரிக்கா நூற்றுக்கணக்கான இந்தியர்களை கைவிலங்கிட்டு திருப்பி அனுப்பியது. அதில் அதிகமானவர்கள் வட இந்தியர்கள், இதில் யாரும் தமிழர்கள் இல்லை,” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT