Published : 22 Feb 2025 01:30 PM
Last Updated : 22 Feb 2025 01:30 PM
சென்னை: “காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியிலேயே இருப்பதா அல்லது கட்சியை விட்டு வேறு இடத்தில் சென்று இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கல்வி என்பது மாநில உரிமை, அதை எடுத்து வைத்துக்கொண்டு அதிகாரம் செய்வதற்கு நீங்கள் (மத்திய அரசு) யார்? மாணவர்களை படிக்க வைக்கும் உரிமைகூட மாநிலத்துக்கு இல்லை என்பது எப்படி? இதற்காகத்தான் நாங்கள் போராடி சுதந்திரம் பெற்றோமா? பிறகு மாநிலத்துக்கு என்னதான் உரிமை இருக்கிறது? எங்கள் மொழி மீது எங்களுக்கு பற்று இருப்பது தேசத் துரோகம் அல்ல. இந்தி என்ற ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டை கூறு போட துடிக்கிறீர்கள் எனக் குற்றம்சாட்டுகிறேன். மொழியை வைத்து நாட்டை கூறுபோட துடிப்பது நீங்களா? நாங்களா?
எங்களுக்கு நிதி வரவில்லை என்று எத்தனை நாட்களுக்கு கூறிக் கொண்டிருப்பது? என்னுடைய மாநிலத்திலிருந்து ஒரு ரூபாய் நிதி கூட வராது என்று சொல்ல முடியாதா? மாநிலங்களின் நிதிதான் மத்திய அரசின் நிதி. ஒன்றிய அரசுக்கு நிதி ஏது? இதைச் செய்தால்தான் நிதி ஒதுக்குவோம் என சொல்வது கொடிய போக்கு. இது எப்படிப்பட்ட அணுகுமுறை?!” என்றார்.
காளியம்மாளின் கட்சி விலகல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “நாம் தமிழர் கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. விரும்பி இயங்குவதற்கும், விருப்பம் இல்லையெனில் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. தங்கையை (காளியம்மாள்) நான்தான் அழைத்து வந்தேன். அவருக்கு எல்லா சுதந்திரமும் இருக்கிறது. பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு வேறு ஓர் அமைப்புக்கு போகலாம். வரும்போது ‘வாங்க வாங்க, வணக்கம்’ என்போம். போகும்போது ‘போங்க, ரொம்ப நன்றி. வாழ்த்துகள்’ என்று சொல்வோம். இது எங்களுடைய கொள்கை.
பருவ காலத்தில் இலையுதிர் காலம் என்று இருக்கிறது. எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியிலேயே இருப்பதா அல்லது கட்சியை விட்டு வேறு இடத்தில் சென்று இயங்குவதா என்று முடிவு எடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT