Published : 22 Feb 2025 06:38 AM
Last Updated : 22 Feb 2025 06:38 AM
இந்தியை வளர்ப்பதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம்: தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
கடலூர்: இந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சி நடப்பதாகவும் கூறினார். நான் இருக்கும் வரை, தமிழகத்துக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் ஒருபோதும் கொண்டுவர முடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில், ரூ.705 கோடி செலவில் 602 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.384 கோடி மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.387 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 44,689 பயனாளிகளுக்கு வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திட்டங்களை அறிவிப்பதோடு விட்டுவிடாமல், மக்களின் இதயம் வரை சென்று சேர்க்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. கொள்கை லட்சியத்தோடு செயல்படுவதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி. பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதை, ‘அண்ணனின் சீதனம்’ என்று பெண்கள் கூறுகின்றனர். கல்வியில் பெண்கள், பாதியில் நின்றுவிட கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் முன்மாதிரி ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு ஜிஎஸ்டி நிதியை எடுத்துக்கொண்டு, அந்த நிதியை தர மறுக்கிறது. புதிய திட்டங்களை அறிவிப்பதில்லை. திட்ட நிதிகளையும் தர மறுக்கிறது. அதையும் தாண்டி திராவிட அரசு உயர்ந்து நிற்கிறது. அதுதான் அவர்களுக்கு கண்ணை உறுத்துகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே கல்விச் சாலைகளை அமைத்து, எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சமூக மக்களும் கல்வி கற்க பாடுபட்ட, அடித்தளம் அமைத்த இயக்கம் திராவிட இயக்கம். இந்த நிலையில், தேசிய கல்
விக் கொள்கை என உருவாக்கி நம்மை உருக்குலைக்கப் பார்க்கின்றனர்.
தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுக்கிறது. இதை தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் என்ற முறையில் கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்’ என்று பதில் அளித்துள்ளார்.
அரசியல் செய்வது நீங்களா, நாங்களா? மும்மொழி கொள்கையை திணிப்பது அரசியல் இல்லையா? பல மொழி பேசும் இந்தியாவில் ஒரு மொழி கொள்கை என்பது அரசியல் இல்லையா? ஒரு திட்டத்துக்கான நிதியை வழங்குவதற்கு நிபந்தனை விதித்து நிர்ப்பந்திப்பது அரசியல் இல்லையா? அரசு நிதியை மக்கள் திட்டத்துக்கு செலவு செய்வது திமுக அரசு. ஆனால், மத்திய அரசு இந்தி திணிப்புக்கு நிதியை செலவு செய்கிறது. கல்வியை வளர்க்க தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரவில்லை. இந்தியை வளர்க்க கொண்டு வந்துள்ளனர். நேரடியாக கொண்டு வந்தால் எதிர்ப்பார்கள் என்பதால் முலாம் பூசி கொண்டு வருகின்றனர். ‘தாய் மொழியை வளர்க்கத்தான்’ என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். நீங்கள் வந்து வளர்க்க, தமிழ் மொழி கையேந்தி நிற்கவில்லை.
‘தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம்’ - மத்திய அரசை கடுமையாக எச்சரிக்கிறேன். தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம். தமிழக மக்களின் தனித்துவமான குணத்தை பார்க்க வேண்டும் என்று மறுபடியும் ஆசைப்படாதீர்கள். நான் இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக எந்த திட்டத்தையும் ஒருபோதும் கொண்டு வர முடியாது. மக்கள் முன்னேற்றம் ஒரு பக்கம், அதற்கான தடைகளை உடைப்பது மறுபக்கம் என இருபாதை பாய்ச்சலை இந்த அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த தடைகள் புதிதல்ல. மக்களுக்கு ஆதரவான வெற்றி பாதையில் என்றென்றும் பயணம் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT