Published : 22 Feb 2025 12:08 AM
Last Updated : 22 Feb 2025 12:08 AM
சென்னை: ‘எந்திரன்’ பட விவகாரத்தில் தனது சொத்துகளை முடக்கியதன் மூலம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
‘எந்திரன்’ பட கதை விவகாரத்தில் காப்புரிமை மீறல் நடந்துள்ளதாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ‘எந்திரன்’ படக் கதை தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த உரிமையியல் வழக்கில், அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. ஆனால், அதை புறக்கணித்துவிட்டு, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தன்னிச்சையான அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் எனது சொத்துகளை முடக்கம் செய்தது சட்டவிரோதம்.
தவிர, இதுபற்றி அமலாக்கத் துறையிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் பரப்பப்பட்டுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம். அமலாக்கத் துறை அதிகாரிகள் இதை மறுபரிசீலனை செய்து, தங்கள் நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால், சட்டரீதியாக மேல்முறையீடு செய்வதை தவிர எனக்கு வேறுவழியில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT