Published : 21 Feb 2025 12:47 AM
Last Updated : 21 Feb 2025 12:47 AM
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கல்வி தேவைகளை எட்டுவதற்கான விரிவான திட்டங்களுடன் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் இந்தியை கட்டாய பாடமாக்கவில்லை. அரசியல் சட்டத்தில் இடப்பட்டுள்ள ஏதாவது ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாக கற்பிக்க பரிந்துரை செய்கிறது. அதனால், தமிழக அரசு திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் ஒன்றை மாணவர்களுக்கு கற்பிக்கலாம். மேலும், மும்மொழித் திட்டமானது பிற மொழிகளை கற்பதற்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும்.
அதேபோல், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் இந்தி மொழியை நம் மாணவர்கள் கற்று கொண்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். தமிழ் தவிர்த்து பிற இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வதை 60 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்துவரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இருமொழிக் கொள்கைகள் உள்ளதால் ஏழைகள், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதேநேரம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் விரும்பும் மொழியையும் கற்கும் உரிமையைப் பெறுகிறார்கள். குறிப்பாக மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போரின் குழந்தைகள் இந்தியை மகிழ்ச்சியாக படிக்கின்றனர்.
பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை அல்லது அரசியல் நோக்கமாக இருக்கலாம். தமிழக அரசியல் தலைவர்கள் எதையும் தர்க்கப் பார்வையுடன், ஆய்வு நோக்கத்துடன் அணுகுவதில்லை. மக்களை ஏமாளிகளாக்குவதற்கு எளிய வழியை மேற்கொள்கின்றனர். இத்தகைய குறுகிய பார்வையுள்ள தலைவர்கள், கல்வியின் தரம் அல்லது மாணவர்களின் தேவைக்கான அறிவார்ந்த அணுகுமுறை குறித்தோ கவலைப்படுவதில்லை. எனவே, சுய லாபத்துக்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் மாய்மாலத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள் இரையாகிவிடாதீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT