Published : 21 Feb 2025 12:26 AM
Last Updated : 21 Feb 2025 12:26 AM
புதுக்கோட்டை: அதிமுக உட்கட்சி விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக ஆட்சி மீது பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டதால்தான், காவல் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். அதனடிப்படையில் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரிமளம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் எழுந்த பாலியல் பிரச்சினையிலும், மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. யாரையும் பழிவாங்கும் போக்குக்கு, அரசு துணை போகாது. குற்றம் நேரிடும் முன்பே தடுப்பது என்பது இயலாத காரியம். அதேநேரத்தில், குற்றம் நடைபெற்ற பிறகு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில், தமிழக அரசின் கருத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.
ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஒருமொழியை வைத்துத்தான் வளர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே போதும், மும்மொழிக் கொள்கை தேவையில்லை. ஆனால், மத்திய அரசு இந்தியைத் திணித்துக் கொண்டுதான் இருக்கிறது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாலேயே, மத்திய அரசை நேரடியாக விமர்சிப்பதில்லை. அதிமுகஉட்கட்சி விவகாரம் என்பது, மத்திய அரசு நடத்திய திருவிளையாடல்தான். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT