Published : 20 Feb 2025 09:13 AM
Last Updated : 20 Feb 2025 09:13 AM
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ மாநாடுகளை நடத்த அறிவுறுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, கடலூர் மாவட்டம் கண்டப்பன்குறிச்சியில் மண்டல அளவிலான மாநாடு 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு ஆசிரியர்கள் வசம் கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளதால் ஆசான்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை இந்த மாநாட்டுக்கு அழைத்துவர ஆசிரியர்கள் பணிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர், “இம்மாநாட்டிற்கு 7 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்தும் அதிகபட்சம் 20 பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இவர்களை அழைத்து வர அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த பேருந்துகள் மற்றும் வேன்களை அனுப்பிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான டீசல் செலவுகளையும் வாகனங்களை அனுப்புகிறவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிகாலை 4 மணிக்கு பள்ளிகளுக்கு வாகனங்கள் வந்துவிடுமாம். அதற்கு முன்னதாக பெற்றோர்களை ஆசிரியர்கள் பள்ளியில் தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் வழியிலேயே பெற்றோருக்கான காலை சிற்றுண்டியை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். காலை 8 மணிக்கு மாநாடு தொடங்கி 12 மணிக்கு முடிந்துவிடும். பிறகு, பெற்றோர்களுக்கான மதிய உணவையும் ஆசிரியர்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாக இருப்பார்கள். அவர்களை மாநாட்டுக்கு அழைத்தால் அன்றைக்கான ஊதியத்தையும் கேட்கிறார்கள். இதையும் சேர்த்தால் ஒரு மாணவனின் பெற்றோருக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் செலவு செய்ய வேண்டும்.
பள்ளிகளில் மாநில அளவில் போட்டிகளில் சாதித்துள்ள மாணவர்களையும் அழைத்துவர வேண்டும் என்பதால் அவர்களுக்கான செலவுகளையும் ஆசிரியர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தச் செலவுகளை எல்லாம் சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களே ஷேர் பண்ணிக் கொள்வது என முடிவெடுத்திருக்கிறோம்.
ஆளும் கட்சியினரிடம் உதவி கேட்டால் ‘கட்சிக்கு டொனேஷன் கொடுப்பதில்லை. இப்படியாவது செலவு செய்யுங்கள்’ என்று சிரிக்கிறார்கள். இதே நாளில் தேசிய திறனறி தேர்வு நடைபெற உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு இதை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கெடுக்காத தனியார் பள்ளிகள் பேருந்துகளை இலவசமாக அனுப்பி வைப்பதுடன் விழா செலவுக்கும் நன்கொடை வழங்க வேண்டும். பெரிய பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் மாநாடு குறித்து விளம்பரங்களைக் கொடுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மண்டலத்தில் நடத்தப்பட்ட இம்மாநாடு அத்தனை சக்சஸாகவில்லை என்பதால் இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் மெனக்கிடுகிறார்கள். அதற்காக எங்களை எல்லாம் படுத்தி எடுக்கிறார்கள். எக்களைக் கொண்டாட மாநாடு நடத்துங்கள் என்று இவர்களை எந்தப் பெற்றோர் வந்து கேட்டார்கள் என தெரியவில்லை” என்று நொந்து கொண்டனர். மாநாடு நடத்தட்டும். ஆனால், அதற்கான செலவுகளை ஆசிரியர்கள் தலையில் சுமத்துவது அத்தனை சரியில்லையே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT