Published : 20 Feb 2025 06:45 AM
Last Updated : 20 Feb 2025 06:45 AM

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90% நிறைவேற்றம்: சென்னை குடியிருப்பு ஒதுக்கீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணையை பயனாளிக்கு வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்தார்.

சென்னை டிக்காஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: சட்டப்பேரவையில் வடசென்னை பகுதிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அறிவித்தேன். இப்போது ரூ.6,400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், நகர்புற வாழ்விட மேலாண்மை வாரியம் சார்பில், ரூ.5,059 கோடி மதிப்பில் 23 மாவட்டங்களில் 44,609 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளோம். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

புதுமைப் பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்லும்போது மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் புதல்வன் திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மேலும், நம்முடைய வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பி வைக்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த பெற்றோர், மகிழ்ச்சியடையும் வகையில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் காலை உணவு வழங்கி வருகிறோம்.

இவை எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த ஆட்சியின் சார்பில்தான் இன்று இப்பகுதி மக்களுக்கு வீடுகளை உருவாக்கித்தந்து அதற்கு தேவையான சலுகைகளை, நீங்கள் எந்த அளவுக்கு எதிர்பார்த்தீர்களோ, அதைவிட அதிகமான சலுகைகளை இந்த அரசு உங்களுக்கு வழங்கியுள்ளது. இதை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., எம்எல்ஏக்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், அ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், வீட்டு வசதித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.பிரபாகர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x