Published : 20 Feb 2025 06:31 AM
Last Updated : 20 Feb 2025 06:31 AM
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தப் பகைவனும் இல்லை என்று சொல்வதுண்டு. 30 ஆண்டுகளைக் கடந்து ஓர் அரசியல் பத்திரிகையாளனாக அனைத்து முகாம்களிலும் தாமரை இலைத் தண்ணீராகப் பழகி வருபவன் நான். சமூக வலைதள உலகம் பிறப்பதற்கு முன்புவரை, கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போர், தத்துவ யுத்தம் என்று வரும்போது மேடைகளில் ஆரோக்கியமான விவாதம் அனல் பறந்து பார்த்திருக்கிறேன். அது நாகரீகமாகவும் இருக்கும்.
ஆனால், இன்றைக்கு அரசியல் என்பதே வேறியேற்றப்பட்டத் தொண்டர்கள், லாபியிஸ்டுகள், ஸ்ரேட்டஜிஸ்டுகள், ஐடி விங்குகளில் இயங்குபவர்கள் என இடைத்தரகர்களால் மாசு மயமாகிவிட்டது. குறிப்பாக, ‘நீ பெரியவனா? நான் பெரியவனா?’ என்கிற தனிமனித வெறுப்பாகவும் வன்மமாகவும் வரம்பு மீறிய வாய்ச்சண்டையாகவும் மாறிப் போய்விட்டது.
இதுதான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், இல்லையில்லை; தமிழ்நாடு என்றைக்கும் அரசியல் நாகரிகத்தின் தனித்துவமான தாய்மடி என்பதை எடுத்துக்கூறும்விதமாக ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்கு நானே நேரடிச் சாட்சியாகவும் இருப்பதால், அதைப் பொதுவெளியில் பகிர்வது ஆரோக்கிய அரசியலுக்கு ஊக்கமாக அமையும் என்று நம்புகிறேன்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய ஆளுநரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்திருந்தார். இதையறிந்து மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் பரபரப்பாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், ‘தோழர் ஆர்.என்.கேவை (இரா.நல்லகண்ணு) காணச் செல்கிறேன்; என்னுடன் இணைந்துகொள்’ என்றார். எனக்கு உடல் சிலிர்த்தது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியச் செயற்குழு உறுப்பினராகவும் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவராகவும் இருந்துவரும் அவரைப் பற்றி நான் கூறித் தெரிந்துகொள்ளும் நிலையில் தமிழ்நாடு இல்லை. கம்யூனிஸ்ட்டுகளில் அவரை வாழும் மகாத்மா எனலாம்.
அப்படிப்பட்டவரின் அரசியல் சித்தாந்தமும் சி.பி.ராதாகிருஷ்ணனின் அரசியல் சித்தாந்தமும் எதிரும் புதிருமானவை. அப்படியிருக்க, அரசியலில் எதிர்முகாம்களைச் சேர்ந்த இருவரும் எதற்காகச் சந்தித்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒருகணம் வியப்பு மேலிட்டாலும் அடுத்த கணம் ஒரு தெளிவு பிறந்தது. பாரதிய ஜனதா கட்சி - திமுக கூட்டணியில் இருந்த 1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரா.நல்லகண்ணுவும் போட்டியிட்டார்கள்.
அந்தத் தேர்தலில், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். இருவேறு கட்சிகளின் வேட்பாளர்களாக ஒரே தொகுதியில் களம் கண்ட இந்த ஒரு தொடர்பு போதாதா என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், இது தமிழ்நாட்டுக்கே உரித்தான உயரிய அரசியல் நாகரிகப் பண்பு என்பதை அவர்களது சந்திப்பிலும் உரையாடல் வழியாகவும் நேரடியாகப் பார்த்தும் கேட்டும் உணர்ந்தேன்.
சென்னை, நந்தனத்தில் உள்ள நல்லகண்ணுவின் இல்லத்துக்குப் போனபோது, நூறு அகவை கண்ட அந்த மாமனிதர், அரசியல் கடந்து, மக்களுக்கான பொதுப்பணியில் இருப்பவர் என்பதை உணர்ந்து, தன்னுடைய உதவியாளர் தோழர் உதயாவுடன் வாயிலுக்கே வந்து சி.பி.ஆரை வரவேற்று அழைத்துச் சென்றார். எங்களுடன் இணைந்துகொண்டிருந்த இன்னொருவர் முன்னாள் அமைச்சர், இன்றைய சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன். சி.பி.ஆர்., நல்லகண்ணுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு நலம் விசாரிக்க, அவருடைய ஆளுநர் பணிகள் எப்படிச் செல்கின்றன என சன்னமான குரலில் அக்கறையுடன் விசாரித்தார்.
சி.பி.ஆர். எழுந்து நல்லகண்ணுவுக்கு சால்வை அணிவித்து வணங்கி வாழ்த்தினார். அருகிலிருந்த நைனார் நாகேந்திரன் பூங்கொத்தைக் கொடுத்தார். அதன்பிறகு அவர்களுடைய தொடக்க உரையாடல், நல்லகண்ணுவின் சொந்த ஊரான ஸ்ரீ வைகுண்டம் பற்றி இருந்தது. சி.பி.ஆர். ‘நைனார் நாகேந்திரனும் உங்கள் மாவட்டத்துக்காரர்தான்’ என்றார்.
பிறகு நெல்லையின் அரசியல் சிறப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். ‘இன்றைய தலைமுறைக்கு நெல்லைச் சதி வழக்கு பற்றித் தெரியாது; அதன் கதாநாயகர்களில் ஒருவாராக கொடுஞ்சிறைக் கொடுமையை அனுபவித்தவர் நீங்கள்’ என்று நல்லகண்ணுவின் கரம் பற்றி சி.பி.ஆர்.சொன்னபோது.. அந்தக் காலகட்டத்துக்குத் திரும்பப் போய் அவர் நினைவு கூர்ந்தவற்றை ஒரு தனிக் கட்டுரையாக எழுதலாம். விடைபெறும்முன்பு, ‘1999 கோவை நாடாளுமன்றத் தேர்தல்’ பற்றி பேச்சு வந்தது.
அப்போது, சி.பி.ஆர்.நல்லகண்ணுவைப் பார்த்து சொன்னார். “ தேர்தலில் பெறும் எல்லா வெற்றியும் வெற்றியல்ல; சில வெற்றிகளுக்குள்ளே தோல்வியும் அடங்கியிருக்கிறது. அது உங்களை எதிர்த்து நான் பெற்ற வெற்றியில் இருந்தது” என்றார். சி.பி.ஆர். இப்படிச் சொன்னதும், 1967 சட்டமன்றத் தேர்தலில், மாணவர் இயக்கங்கள் உருவாக்கிய இந்தி எதிர்ப்பு அலை, திமுகவுக்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆதரவு ஆகியவற்றின் காரணமாக காங்கிரஸ் தோற்றது.
பெருந்தலைவர் காமராஜரை சீனிவாசன் என்கிற இளைஞர் தோற்கடித்தார். சீனிவாசனும் அவருடைய சகாக்கள் சிலரும் நுங்கம்பாக்கத்தில் இருந்த அண்ணாவின் இல்லத்துக்குள் ‘காமராஜர் தோற்றார்’ என என உற்சாகத்துடன் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தபோது ‘காமராஜர் எவ்வளவு பெரிய தலைவர்.. கோசம் போடாமல் உடனே அமைதியாகப் போங்கள்’ என்று அண்ணா அவர்களைக் கண்டித்து அனுப்பினார் எனப் படித்தது எனக்கு நினைவுக்கு வந்தது.
தோழர் நல்லகண்ணுவிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்து காரில் ஏறிய சி.பி.ஆர் ‘அடுத்து நாம் பழ.நெடுமாறனைப் பார்க்கப் போகிறோம்’ என்றார். அவர் மற்றொரு பழுத்த பழம். தமிழ்த்தேசிய அரசியல் களத்தின் முன்னத்தி ஏர்களில் வாழும் வரலாறு. முதுமையின் காரணமாக, அண்ணா நகரில் உள்ள ஓர் ஆயுர்வேதாக் கல்லூரியின் வைத்திய விடுதியில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அருகில் மனைவி இருந்து அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்.
இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது பெரியார் - ராஜாஜியின் நட்பு குறித்த பேச்சு வந்தது. அப்போது நெடுமாறன் சொன்னார்: “ராஜாஜி உடல்நலம் குன்றி ஒருமுறை ஆபத்தான கட்டத்துக்குப் போய்விட்டார். அப்போது பெரியார், துடிதுடித்தார். ராஜாஜி மறைந்தபோது அவரிடன் உடலைப் பார்த்து பெரிய ஓவெனக் கதறிக் கதறி அழுததை ஓர் இளைஞனாக நான் பக்கத்திலிருந்து ஆச்சர்யம் விலகாமல் பார்த்தேன். அப்போது நான் காமராஜரிடம் இருந்தேன். அவரிடம் இதைக் கேட்டும் விட்டேன்.
காமராஜர் சொன்னார்: ‘அவர்களின் நட்பும் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது’. என்றார். அவர் சொன்னது உண்மைதான்; ராஜாஜி, ராமனைக் கதாநாயகனாகப் பார்த்தவர். பெரியார் ராமனை கடுமையாக விமர்சனம் செய்தவர். கொள்ளை ரீதியாக இருவரும் இருவேறு துருவங்கள். ஆனால், அதைத்தாண்டி அவர்கள் இருவருக்கும் இடையில் உயிருக்குயிரான நட்பு இருந்தது. இது தமிழ் மண்ணுக்கே உரிதான பண்பு” என்றார்.
எந்தக் கிரீடமும் இல்லாமல் மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி.ஆர்.. நூறு அகவை கண்ட தோழர் இரா.நல்லகண்ணுவையும் இயற்கை சிகிச்சைஎடுத்துகொள்ளும் முதுபெரும் தமிழ்த்தேசியப் போராளி பழ நெடுமாறனையும் தேடிச் சென்று அவர்களைக் கௌரவம் செய்து அன்போடு அளவளாவிய சந்திப்பு, தற்போதைய தமிழ்நாட்டு அரசியலில் இருப்பவர்களுக்கு இதுதான் ‘நமது பண்பாடு’ என்பதை எடுத்துச் சொல்வது. ‘மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மனம் உண்டு’ என்ற அறிஞர் அண்ணாவின் சொற்களுக்குச் சாட்சியம் பகர்வது.
- மைபா.நாராயணன், கட்டுரையாளர் - மூத்த பத்திரிகையாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT