Published : 19 Feb 2025 07:01 PM
Last Updated : 19 Feb 2025 07:01 PM

‘தமிழகத்தில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்’ - இபிஎஸ் கண்டனம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. இந்த ஆட்சியில் தமிழகம் இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா?

திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது. இனியாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x