Published : 19 Feb 2025 03:11 PM
Last Updated : 19 Feb 2025 03:11 PM
சென்னை: “தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால், ஏற்கெனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பாஜக, அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி உறுப்பு 353-ல், இந்தியாவில் ஆட்சி மொழிகளாக இந்தியும், ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு பிறகு, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில், அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தமிழகம் வரும் போது, கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக அறிவித்தது.
அதை அறிந்தவுடனேயே அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 3 ஆகஸ்ட் 1960-ல் மக்களவையில் திமுகவின் இரு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத்தை அழைத்து பேசி, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படாது அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று வழங்கிய கடிதத்தின் மூலமாக உறுதிமொழி அளித்தார். அந்த கடிதத்தை சம்பத் அன்றைய திமுக தலைவர் அண்ணாவிடம் அளித்த பிறகு, திமுக அறிவித்த கருப்புக் கொடி போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
இரு உறுப்பினர்கள் மட்டுமே இருந்த திமுகவின் கோரிக்கையை ஜனநாயக உணர்வோடு ஏற்றுக் கொண்ட நேருவை அன்று கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அண்ணா பாராட்டி மகிழ்ந்ததை அனைவரும் அறிவார்கள். இதை அண்ணாமலை போன்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேரு மறைவுக்குப் பிறகு, அவர் கொடுத்த உறுதிமொழிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் பிரதமர்களாக பொறுப்பு வகித்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழிகள் சட்டம் 1963-ல் திருத்தம் கொண்டு வந்தார்கள்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் 28 மார்ச் 1968 அன்று நடைபெற்ற விவாதத்தில் அன்றைய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவான் தெரிவித்தபடி, இத்திருத்தச் சட்டத்தை மேலும் வலிமைப்படுத்தி இந்தி பேசாத மக்களை பாதுகாக்கும் வகையில் சில தீர்மானங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதை இங்கு நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்.
இதன்படி, இந்தியாவில் உள்ள நாகாலாந்து போன்ற சிறிய மாநிலம் விரும்பினாலும் கூட ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்புகிற கடிதப் போக்குவரத்து அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதோடு, இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்பட வாய்ப்பே இல்லாத நிலையில் சட்டத் திருத்தம் பாதுகாப்பு கேடயமாக அமைந்தது. இத்தகைய பின்னணியில் தான் மொழி பிரச்சினைக்கு அன்றைய காங்கிரஸ் அரசுகள் தீர்வு கண்டது.
ஆனால், அதற்கு நேர்மாறாக மத்திய பாஜக அரசு தமிழக மக்கள் மீது தற்போது மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி மொழியை திணிக்க பகிரங்கமாக முயற்சி செய்கிறது. மும்மொழி திட்டத்தை திணிக்கிற தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், இந்துத்வா கொள்கைகளை பரப்புகிற பிஎம்ஸ்ரீ பள்ளிகளை திறக்க வேண்டும், இதை ஏற்கவில்லை என்றால் தமிழக கல்வித்துறைக்கு மத்திய பாஜக அரசு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூபாய் 2152 கோடியை வழங்க முடியாது என்று ஆணவத்தோடு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
இதை கண்டிக்கிற வகையில் தான் மொழித் திணிப்புக்கு எதிராக திமுக ஏற்பாடு செய்த கண்டன கூட்டத்தில் தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். தமிழகமே மொழித் திணிப்புக்கு எதிராக திரண்டு எழுகிற சூழலில் மும்மொழி திட்டத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக 90 நாட்கள் கையெழுத்து இயக்கம் நடத்தப் போவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
அண்ணாமலை அறிவிப்பின் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக செயல்பட்டு வருகிறது. இத்தகைய அராஜக ஆணவப் போக்குக்கு தமிழக மக்கள் நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள். மேலும், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி படிக்கும் போது, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் ? என்று அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 38,000. இதில் தனியார் பள்ளிகள் 12,690. சிபிஎஸ்இ பள்ளிகள் வெறும் 1835 மட்டுமே. இதில் மும்மொழி திட்டத்தின்படி கட்டாய பாடமாக இந்தி கற்பிக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து தமிழகத்துக்கு வருகிறவர்களுக்கு வசதியாக இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் இருப்பதைப் போல தமிழகத்திலும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. அதேபோல, மத்திய அரசின் பணியாளர்களின் வசதிக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ளன. இதிலும் மும்மொழி திட்டம் நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளில் 3.16 சதவிகித பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாய பாடமாக இருக்கிறது. மீதிமுள்ள அனைத்து பள்ளிகளிலும் 1968-ல் திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இருமொழி கொள்கையின்படி தாய் மொழி தமிழோடு, ஆங்கிலம் என இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கிற 43 லட்சம் மாணவர்கள் மீது இந்த இருமொழிக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதை எதிர்த்து தான் தமிழகத்தில் இன்றைக்கு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
தமிழகத்தின் மீது மும்மொழி திட்டத்தின்படி இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால், ஏற்கெனவே படுகுழியில் வீழ்ந்துவிட்ட பாஜக, அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டு அதனுடைய எதிர்காலமே சூனியமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT