Published : 19 Feb 2025 12:15 AM
Last Updated : 19 Feb 2025 12:15 AM
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்க முடியாது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
விக்கிரவாண்டி அருகே 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ராஜீவ்காந்தியை அவதுாறாகப் பேசியதாக கஞ்சனுார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சீமான் நேற்று ஆஜரானார். ராஜீவ் காந்தியை அவதுாறாகப் பேசியதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று நீதிபதி கேட்டபோது, அதை சீமான் மறுத்தார். இதையடுத்து, விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தின் தாய் மொழி தமிழ். பயன்பாட்டு மொழி ஆங்கிலம். இந்தியைப் படிக்க வேண்டும் என்பது தவறான கொள்கை. மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயில் இருந்துதான், மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதாவது, நம்மிடமிருந்து பெறப்பட்ட வரியைத் தான் மீண்டும் நாம் நிதியாகப் பெறுகிறோம். மத்திய அரசின் நிதி என்பது நாட்டின் பொதுவுடமை. மும்மொழிக் கொள்கையைக் கடைபிடித்தால்தான், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவோம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது.
இந்தியா ஒருமைப்பாடுமிக்க நாடாக இருக்க வேண்டுமெனில், அனைத்து மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும். இந்தியைப் படித்தால் நாட்டில் பசி, பட்டினி தீர்ந்து விடுமா ? இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிககும் தமிழர்கள், தங்கள் விருப்பப்படி எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடியான கொள்கை.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்கள். ஆனால், இதுவரை வேலைவாய்ப்பு வழங்கவில்லை. தமிழக அரசு ஆளும் கட்சியாக இருக்கும்போது மோடியை வரவேற்பதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பதும் சகஜம்தான். தமிழக அரசு கோழைகளின் கூடாரமாகத் திகழ்கிறது. எதற்காக இந்தி படிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விளக்க வேண்டும். இந்தி படிப்பதுதான் தேசப்பற்றா?
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. மயிலாடுதுறையில் கள்ளச் சாரயத்தை தடுத்த இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இவ்வாறு சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT