Published : 16 Feb 2025 06:59 PM
Last Updated : 16 Feb 2025 06:59 PM
தாம்பரம்: பாரதிய ஜனதா கட்சியுடன் தவெக தலைவர் விஜய்க்கு உறவு உள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நண்பர்கள் அறப்பணி மன்றம் சார்பில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடியாசைத்து துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர்.
போட்டி குரோம்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தையே வந்தடைந்தனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பத்தாயிரம், ஐந்தாயிரம், மூன்றாயிரம் என ஊக்க தொகையுடன் கோப்பை, மெடல், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதேபோல போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், “தமிழக மக்களிடையே போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. போதைப் பொருட்கள் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி அவர்கள் கெட்டுப் போகும் நிலைக்குத் தள்ளியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
இது கடந்த 10 வருடத்தில் ஆரம்பித்தது அப்போது யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஞ்சா பிடிக்கப்படுகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, “இதிலிருந்து என்னத் தெரிகிறது பாஜகவும் அவரும் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். அவர் இன்னும் களத்திற்கே வரவில்லை, அவர் கேட்காமலேயே ஒன்றிய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்குகிறது என்றால் என்ன அர்த்தம், பாஜகவுக்கும் தவெகவுக்கும் உறவு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.” எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT