Published : 16 Feb 2025 04:04 PM
Last Updated : 16 Feb 2025 04:04 PM

தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கக்கூடாது: பாஜகவுக்கு அன்புமணி கண்டனம்

“ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டுக்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழப்பிக் கொள்ளக் கூடாது.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுகள் தனிக்கொள்கையை கடைபிடிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதால், ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை வழங்காமல் பல மாதங்களாக மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது.

புதியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசு நிதியை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்று பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபட தெரிவித்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத் தான் மத்திய கல்வியமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.

மும்மொழித் திணிப்பு என்ற போர் தமிழகத்தின் மீது 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் போரில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் தான் வென்று வருகின்றனர். 1963-ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்த போது, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும்; இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனிக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளன. இப்போதும் கூட தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து இன்னும் செயலாக்கம் செய்யாமல் வைத்திருக்கிறது. இது மாநில அரசின் உரிமை. இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டுக்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழப்பிக் கொள்ளக் கூடாது.

மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x