Published : 16 Feb 2025 02:52 PM
Last Updated : 16 Feb 2025 02:52 PM
சென்னை: “கருத்து சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரப் போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். விகடன் இணையதளத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து விகடனில் வெளியிடப்பட்ட கார்ட்டூனுக்காக விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு நேரடியாக எதுவும் உறுதி செய்யவில்லை. ஆனால், சில குறிப்பிட்ட செல்போன் சேவை வழுங்குநர்களின் பயனாளர்களால் விகடன் குழும இணையதளத்தை காண இயலவில்லை. இந்நிலையில், விகடன் இணையதளம் முடக்கம் தொடர்பாக பல்வேறு தமிழக முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் விகடன் இணையதள முடக்கம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் சமூக அரசியல் பண்பாட்டுத் துறையில் இரண்டறக் கலந்திருக்கும் விகடன் பத்திரிக்கை இதழியல் துறையில் நூற்றாண்டு கண்ட சிறப்புக்கு உரியதாகும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து விகடனில் வெளியிடப்பட்ட கார்ட்டூனுக்காக விகடன் இணையதளத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்கி இருக்கிறது.
நெருக்கடி காலத்தை அடிக்கடி நினைவூட்டுகிற பிரதமர் மோடி ஆட்சியில் நெருக்கடி நிலை காலத்தையே மிஞ்சுகிற அளவுக்கு ஊடக பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை, எல்லைகளற்ற செய்தியாளர்கள் (சுளுகு) அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையில், உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை மதிப்பிடப்படுகிறது. 180 நாடுகளின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 2024-இல் இந்தியா 159ஆவது இடத்தில் உள்ளது.
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான எதேச்சதிகாரப் போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். விகடன் இணையதளத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT