Published : 16 Feb 2025 10:16 AM
Last Updated : 16 Feb 2025 10:16 AM

மத்திய அரசு நிதி விரைவாக கிடைக்காத காரணத்தால் திட்ட பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) 4-வது ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஐ.பெரியாசாமி, மா.சுப்பிரமணியன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), துரை வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக) மற்றும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலி்ன் பேசியதாவது: சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டபடி தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் கேட்டுக் கொண்டபடி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் அலகுத்தொகையை உயர்த்துவதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதைப் பொறுத்தவரை தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

தமிழகத்தில் 500-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இப்படியான 7 கிராமங்கள்தான் தமிழகத்தில் உள்ளன. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதிபெற்ற பிறகுதான் அங்கே இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்த முடியும். அதனால், ஏற்கெனவே உள்ள சாலைகளை மேம்படுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டத்தில், 2021-22 ஆண்டு வரை 3 லட்சத்து 61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்தில், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், அலகு தொகையை குறைந்தபட்சம் ரூ. 3.50 லட்சமாக உயர்த்த மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் வராததால், மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நூறு நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடியில் உள்ள தமிழகம் 2023-24-ம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களைவிட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியிருக்கிறோம். கடந்த நவம்பர் மாதத்துக்குப்பின் மத்திய அரசால் ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதுடன், மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியும், ஊதிய நிலுவைத் தொகை ரூ.2,118 கோடி வராமல் உள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 2024-25 ஜனவரி மாதம் வரை 76,733 ஹெக்டேரில் நுண்ணுயிர் பாசன அமைப்புக்கு ரூ.66.84 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் உழவர்கள் அதிகப் பங்குத் தொகை செலுத்த வேண்டியிருப்பதால் நில உச்சவரம்பு 5 ஹெக்டேர் என்பதை தளர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தமிழக அரசைப்பொறுத்தவரை, மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருகிறோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்துள்ளால், காலதாமதமில்லாமல் விடுவிக்கிறோம். ஆனால், மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x