Published : 14 Feb 2025 06:02 PM
Last Updated : 14 Feb 2025 06:02 PM
சென்னை: “தமிழகத்துக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள். மாறாக தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. அவரது சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது. முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநரின் நடத்தை குறித்து ‘இந்து’ ஆங்கில நாளிதழின் கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது?
முதல்வர் தனது எக்ஸ் தளப் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது பதிவு ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை அரசியல்மயமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
‘தி இந்து’ பத்திரிக்கையானது நன்மதிப்பை பெற்ற செய்தித்தாள். அதன் வரலாறு முழுக்க சுதந்திரமான மற்றும் அதீத நேர்மையை கடைபிடித்து ஒருமைப்பாட்டினை காக்கும் வகையில் இருந்து வருகிறது. சாவர்க்கரையும் கோட்சேவையும் பின்பற்றுபவர்களுக்கு நேர்மை என்பது அந்நியமானதாக இருந்தாலும், மாநில ஆளுநர் பத்திரிகைகளை அவமதிக்க கூடாது என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்ப்பர். ஆளுநர் தனது எக்ஸ் தளப்பதிவில் எந்த ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு இணைத்துள்ளார் என்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது.
ஒருவேளை அவர் அந்த தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா? அவர் தமிழக அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா? அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழக மக்களைப் புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்? அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
தமிழக மக்களையும் திமுகவினையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள விரும்பினால் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கிறோம். நோட்டாவுக்கு கீழ் வாக்குகள் வாங்குவதையாவது தவிர்ப்பாரா என்று பார்ப்போம்.
ஆளுநர் அவர்களே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. இந்த மாநிலம் கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பிற நல்லாட்சி குறியீடுகளில் முன்னணியில் உள்ளது. நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம். தமிழகத்துக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள். மாறாக தமிழக மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT