Last Updated : 14 Feb, 2025 08:44 AM

7  

Published : 14 Feb 2025 08:44 AM
Last Updated : 14 Feb 2025 08:44 AM

100 நாள் வேலை: காந்தி பெயரில் நடக்கும் திட்டத்திலேயே காந்தி கணக்கா?

கிராமப்புறத்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் கொண்டு வரப்பட்டது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம். இதன் மூலம் கிராமப்புறத்து மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.319 ஊதியம் வழங்கப்படுவதாக கணக்குகள் சொன்னாலும், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக ரூ.270 மட்டுமே பயனாளிகளின் கைக்குப் போய்ச் சேர்வதாகச் சொல்கிறார்கள். இதுவுமில்லாமல் சில இடங்களில் போலியான ஆட்கள் மூலம் வருகைப் பதிவுகளை ஏற்படுத்தி மொத்தப் பணத்தையும் ஸ்வாகா செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்​தகைய மோசடிகள் எல்லாம் நடந்​து​ விடக் கூடாது என்ப​தற்​காகவே செயலிகள் மூலம் பயனாளி​களின் தினசரி வருகை​யானது பதிவேற்​றம் செய்​யப்​படு​கிறது. அதன்​படி, பயனாளி​கள் தங்கள் செயல்​பாடுகளை காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், அவர்​கள் பற்றிய விவரங்களை மதி​யம் 2 மணிக்​கும் செயலி வழியே பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

மேலும், பயனாளி​களின் வருகைப் பதிவேடு​களை​யும் அவர்​களின் ஆதார் எண், புகைப்​படத்​துடன் பதிவேற்​றம் செய்​ய​வேண்​டும். இப்படி​யெல்​லாம் கடிவாளம் போட்​டாலும் அதி​லும் சில அதிகாரி​கள் புகுந்து விளை​யாடு​வ​தாகச் சொல்​கிறார் கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் பி.காந்தி.

“100 நாள் வேலைக்​குச் செல்​பவர்​களில் பெரும்​பாலானவர்​கள் கடப்​பாரை, மண்வெட்டி, பாண்டு சகிதம் போய் மரத்தடி நிழலில் அமர்ந்​திருந்​து​விட்டு பெயரளவுக்கு ஏதோ மண்ணைக் கொத்​தி​விட்டு மதி​யம் வீடு திரும்​பு​கின்​றனர். இதைத் தங்களுக்கு சாதக​மாக்​கிக்​கொள்​ளும் ஊராட்​சிப் பணியாளர்​களும், உள்ளாட்சி பிரதி​நி​தி​களும் இஷ்டத்​துக்கு ஊழல் செய்து பணத்​தைச் சுரண்​டு​கிறார்​கள்.

எனக்​குத் தெரிந்து இங்குள்ள ஓர் ஊராட்​சி​யில் 100 நாள் வேலை​யில் இருப்​பவர்​கள் 20 பேர் தான். ஆனால், 80 பேர் வேலை செய்​வதாக கணக்​கெழுதுகிறார்​கள். மீதி 60 பேருக்கு வேலை செய்​யாமலேயே ஊதி​யம் வழங்​கு​கிறார்​கள். அந்த 60 பேருக்​கும் கையெழுத்​துப் போட்டு விவரங்களை செயலி​யில் பதிவேற்​றம் செய்​வதற்​காகவே ஒருவருக்கு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்கி​யிருப்பது தான் பெரும் கூத்து” என்கிறார் பி.காந்தி.

இதுபற்றி மேலும் சில விவரங்​களைப் பகிர்ந்து கொண்ட உளுந்​தூர்​பேட்டை பிடாகம் ஊராட்​சி​யைச் சேர்ந்த ஆறுமுகம். “கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் பல ஊராட்​சிகளில் ஊராட்சி செயலருக்கு 20 அட்டை, தலைவருக்கு 20 அட்டை, மக்கள் நலப்​பணி​யாள​ருக்கு 10 அட்டை என 100 நாள் வேலை திட்​டத்​துக்கான அடையாள அட்டைகளை ஒதுக்​கி ​வைத்​துக் கொள்​கிறார்​கள். இந்த 50 அட்டைகளுக்​கும் அவர்களே வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்​களைப் பதிவேற்​றம் செய்​து​விடு​கிறார்​கள்.

இந்த 50 அட்டைகளுக்கான சொந்​தக்​காரர்​கள் வேறு எங்காவது வேலை​யில் இருப்​பார்​கள். இவர்​களது ஏடிஎம் கார்​டு​கள் மக்கள் நலப் பணியாளரிட​மும், ஊராட்சி செயலரிட​மும் இருக்​கும். இந்தப் பயனாளி​களின் வங்கிக் கணக்​கில் வரவாகும் பணத்​தில் குறிப்​பிட்ட தொகையை ஊராட்சி செயலரும், மக்கள் நலப் பணியாள​ரும் எடுத்​துக்​கொண்டு மீதி​யைத்​தான் பயனாளி​களுக்கு கொடுப்​பார்​கள். இதில் உள்ளாட்​சிப் பிரதி​நி​தி​களுக்கான பங்கும் போகும். வேலையே செய்​யாமல் வரும் பணம் என்ப​தால் பயனாளி​களும் வந்தவரை லாபம் என விட்டு​விடு​கிறார்​கள்.

திட்​டத்​தின் உண்மையான பயனாளி​களுக்கு 4 மாதங்​கள் கூட ஊதி​யம் வராமல் இருக்​கும். ஆனால், வேலைக்கு வராத பயனாளி​களின் வங்கிக் கணக்​கில் பணம் உடனுக்​குடன் வரவாகி​விடும். ரோட்​டோரம் முறுக்கு விற்​பவர், நகைக்கடை ஊழியர்​கள், வீட்டுப் பணிப்​பெண்​கள் இவர்​களெல்​லாம் 100 நாள் வேலைக்கு வருவது போன்று வருகைப் பதிவேடுகளை தயாரித்து பணத்தை முறை​கேடாக எடுப்​பதாக ஆதா​ராத்​துடன் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் அளித்​தும் எந்த நடவடிக்கை​யும் எடுக்க​வில்லை” என்றார் ஆவேச​மாக.

இந்த முறை​கேடு​கள் குறித்து நம்மிடம் பேசிய 100 நாள் வேலை திட்ட முறை​கேடு கண்காணிப்பு அதிகாரி ஒருவர், “கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் இதுபோன்று 30 ஊராட்​சிகளில் நடைபெற்ற முறை​கேடு​கள் கண்டறியப்​பட்டு, சம்பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

முறை​கேடாக எடுக்​கப்​பட்ட பணமும் ரெக்​கவரி செய்​யப்​பட்​டது. ஒருசில இடங்​களில் நடைபெற்ற முறை​கேடு​கள் தொடர்பாக வழக்​கு​கள் நடந்து வருகிறது. அரசி​யல் தலையீடு​கள் இருப்​ப​தாலேயே இதுபோன்ற முறை​கேடுகளை எங்களால்​ முழு​மை​யாக தடுக்​க முடிய​வில்​லை” என்றார்​. காந்​தி​யின்​ பெயரில்​ செயல்​படுத்தப்படும் திட்டத்திலேயே இப்படி காந்தி கணக்கு எழுதி காசைச் சுரண்டுபவர்களை என்னவென்று சொல்வது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x