Published : 14 Feb 2025 12:31 AM
Last Updated : 14 Feb 2025 12:31 AM

பாஜகவுடன் கூட்டணி வைப்பதே அதிமுகவுக்கு நல்லது: ஓ.பன்னீர்செல்வம் கருத்து

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்தவே அதிமுகவை ஒருங்கிணைக்க தொடர்ந்து போராடுகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு விதைபோட்டவர் ஜெயலலிதா. ஆனால், இதற்கு பழனிசாமி சொந்தம் கொண்டாடுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைத் தவிர்த்து பாராட்டு விழா நடத்திக் கொண்டார். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன்தான். அவர் மீது எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது அவரும், நானும் பல தேர்தல்களி்ல் இணைந்து பணியாற்றினோம்.

கடந்த 50 ஆண்டுகளில் இரு தலைவர்கள் உருவாக்கிய விதிமுறைகளைத் திருத்தம் செய்து பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி வகிக்கிறார். நான், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவை ஒருங்கிணைக்க எந்த நிபந்தனையுமின்றி தயாராக இருக்கிறோம். பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு. இல்லையெனில் நான் உட்பட அனைவருக்கும் தாழ்வுதான்.

அதிமுக ஒருங்கிணைந்தால், பாஜகவுடன் கூட்டணி வைப்பதுதான் நல்லது. தேசியக் கட்சியுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டும்போது, நாம் பாராட்டுவதில் தவறில்லை. அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்கள், அவர்களது கட்சியை வளர்க்க கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு நான் எப்படி கண்டனம் தெரிவிக்க முடியும்? பெரியார் கருத்துக்கு வலுவூட்டியவர் ஜெயலலிதா. அதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

ஒற்றைத் தலைமையே வெற்றியைத் தரும் என்றார்கள். ஆனால், இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. தொண்டர்கள் கோரிக்யையை ஏற்று அதிமுக ஒருங்கிணைந்து இருந்தால், தற்போது ஆட்சியில் இருந்திருக்கும். தனி கட்சி தொடங்குவதோ, வேறு கட்சிக்குச் செல்வதோ எங்கள் நோக்கமல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை செயல்படுத்த வேண்டுமென்ற நோக்கில்தான் தொடர்ந்து போராடி வருகிறோம்.

சாதாரண தொண்டனான என்னை அதிமுகதான் அரசியல் உச்சத்துக்கு கொண்டுசென்றது. அந்த வகையில், தொடர் தோல்விகளைச் சந்க்கும் அதிமுகவை நினைத்து கவலையடைகிறோம். எனவேதான், கட்சியை ஒருங்கிணைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சமி நிலம்... தேனி-மதுரை சாலை​யில் உள்ள ராஜாகளம் எனும் இடத்​தில் 81 சென்ட் பஞ்சமி நிலத்தை நான் வாங்​கிய​தாக​வும், மாநிலப் பட்டியலின மற்றும் பழங்​குடி​யினர் ஆணையம் சம்பந்​தப்​பட்டபட்டாவை ரத்துசெய்ய உத்தர​விட்​ட​தாக​வும் வெளியான தகவல் தவறானது. நில உச்சவரம்பு சட்டத்​தின் கீழ் கையப்​படுத்​தப்​பட்டு, நிலமற்ற ஏழை விவசா​யிகளுக்கு வழங்​கப்​பட்ட நிலத்​தில் 81 சென்ட்இடத்தை, 2022-ல் ஹரிசங்கர் என்பரிட​மிருந்து வாங்​கினேன். 2024-ல் அந்நிலத்தை சுப்பு​ராஜ் என்பவருக்கு விற்று​விட்​டேன். இது தொடர்பாக வெளி வந்ததகவல்கள் அனைத்​தும் தவறானவை. இவ்​வாறு ஓ,பன்னீர்செல்வம் கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x