Published : 12 Feb 2025 09:43 PM
Last Updated : 12 Feb 2025 09:43 PM

6 மாநிலங்களவை எம்.பி பதவி ‘ரேஸ்’ - திமுக, அதிமுகவில் யாருக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் இப்போதே தமிழக அரசியலில் சலசலப்பை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனால் இப்போதே திமுக மற்றும் அதிமுக வட்டாரங்களில் மாநிலங்களவை எம்.பி பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவ ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஒரு எம்.பியை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால் தற்போது 134 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்எல்ஏக்கள் (ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் உட்பட) வைத்துள்ள அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

திமுக சார்பில் மீண்டும் உறுதியாக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆவார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் நாடாளுமன்றத்தில் பல்வேறு மசோதாக்களில் சட்டபூர்வமான வாதங்களை அவர் முன்வைத்து வருவதால், அவருக்கு சீட் நிச்சயம் என கூறப்படுகிறது. அதுபோல உதயநிதி ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள எம்.எம்.அப்துல்லாவுக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சும் நிலவுகிறது. சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் அடிப்படையிலும் அப்துல்லாவுக்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

மற்ற இரு எம்.பிக்களை பொறுத்தவரை, கடந்த முறை திமுக சார்பில் எம்.பியான வைகோவுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாது. ஏனென்றால் 2019 மக்களவைத் தேர்தல் உடன்படிக்கையின்போதே மதிமுகவுக்கு ஒரு மக்களவை சீட், ஒரு மாநிலங்களவை சீட் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2024 தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை சீட் மட்டுமே ஒப்பந்தமானது. எனவே, மதிமுகவுக்கு இம்முறை சீட் கிடைக்காது.

அதே நேரத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யத்துக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆனாலும், அப்போதே ஒரு மாநிலங்களவை சீட் வழங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. அதனடிப்படையில் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் நிச்சயம். திமுக வசம் உள்ள மற்றொரு இடம் தொமுசவுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம். எனவே, இம்முறையும் தொமுச நிர்வாகி ஒருவருக்கு எம்.பி சீட் கிடைக்கலாம். அதே நேரத்தில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பிலும் ஒரு சீட் பெற காய் நகர்த்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக தரப்பில் கடந்தமுறை எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இம்முறை பாஜக கூட்டணியில் உள்ளார். எனவே அதிமுக சார்பில் 2 எம்.பிக்கள் தேர்வாகும் வாய்ப்பு உள்ளது. அதிமுகவுக்கு தற்போது மக்களவை உறுப்பினர்கள் இல்லை, மாநிலங்களவையிலும் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் என 3 உறுப்பினர்களே உள்ளனர். அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பியான தர்மர் இப்போது ஓபிஎஸ் அணியில் தனியாக செயல்படுகிறார். எனவே ராஜ்யசபாவில் தங்களின் பலத்தை பெருக்க அதிமுக விரும்புகிறது. இதனால், அதிமுக சார்பில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த இருவரை எம்.பியாக்க அக்கட்சி நினைக்கிறது. அதிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென அதிமுக கணக்கு போடுகிறது.

இந்தச் சூழலில்தான், அதிமுக சார்பில் தங்களுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாக கிடைக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின்போதே தங்களுக்கு அதிமுக தரப்பிலிருந்து இந்த உறுதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இதுகுறித்து அதிமுகவிலிருந்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனவே, அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் பல தாக்கங்களை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறுகின்றனர். அது 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நிச்சயமாக எதிரொலிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x