Published : 12 Feb 2025 05:20 PM
Last Updated : 12 Feb 2025 05:20 PM

“அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை” - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம் | கோப்புப்படம்

சென்னை: “அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலையும் அல்ல, அதற்கு அதிகாரமும் இல்லை” என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அதற்கு அதிகாரமும் இல்லை. அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையமும் நீதிமன்றங்களில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழக்கிலும்கூட, தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் நாங்கள் முடிவெடுப்போம் என்று கூறியிருந்தது.

தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்த புகழேந்தி யார்? அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து கையெழுத்திட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் இந்த புகழேந்தி. இன்றைக்கு அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜால்ரா அடிக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், புகழேந்தி மனுவை விசாரணைக்கு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருக்கிறார்.

அதிமுகவில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டவிதிகளில் குறைகள் இருந்தால், அதுகுறித்து விசாரிக்க நீதிமன்றத்துக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது. எனவே, தான் உட்கட்சி விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்கக் கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். அதைத்தான் இன்று நீதிமன்றமும் கூறியிருக்கிறது, உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள் என்றுதான் தீர்ப்பளித்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் விவரம்: அதிமுக சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x