Published : 12 Feb 2025 01:34 PM
Last Updated : 12 Feb 2025 01:34 PM

“ஜெயலலிதா புகழை மறைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்” - புகழேந்தி

புகழேந்தி | கோப்புப்படம்

சென்னை: “அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணை நீக்கப்பட்டுவிட்டது. இனி தடை இல்லை என்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.” என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும். தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம், முடிவெடுக்கலாம். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டிய அதிகாரம் அவர்களுக்குத்தான் இருக்கிறது, என்பதுதான் எங்கள் தரப்பு வாதமாக இருந்தது. மிக மகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கிறேன்.

இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையாணை நீக்கப்பட்டுவிட்டது. இனி தடை இல்லை.

எனவே, இனி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பயன்படுத்தக்கூடாது. அதிமுக கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது. உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரையில், பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, அவர் இனியும் ஊர் உலகையும், ஊடகங்களையும் ஏமாற்ற வேண்டாம். இனி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கிச் செல்வோம். என்னுடைய நோக்கம் எம்ஜிஆர் கொடுத்த இரட்டை இலை சின்னத்தை முடக்குவது அல்ல. பழனிசாமி என்ற தீயசக்தியிடம் அது இருக்கக்கூடாது என்பதுதான், என்னுடைய நோக்கம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நடந்த 4 வருட அதிமுக ஆட்சி நீடிக்கவும் அவரே காரணம். அவர் உயிரிழக்காமல் இருந்திருந்தால், பழனிசாமி முதல்வராக ஆகியிருக்க முடியாது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு 3.72 கோடி ரூபாயை ஜெயலலிதா தான் ஒதுக்கினார். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாமல், நடத்தப்பட்ட விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி கவலையே இல்லாமல் செல்கிறார். அழைப்பிதழிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை. அதை சிலர் நியாயம் என்ற வகையில் பேசுகின்றனர். ஜெயலலிதாவை புதைத்தோம் ஆனால், அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது புகழை மறைக்க, புதைக்க நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டோம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. | விரிவாக வாசிக்க > அதிமுக சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x