Published : 12 Feb 2025 07:37 AM
Last Updated : 12 Feb 2025 07:37 AM

எரிமலையா... பனிமலையா..? - என்ன செய்யப் போகிறார் செங்கோட்டையன்?

அமைதிக்கு பேர் போன செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருப்பது அதிமுக-வுக்குள் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்​களுக்கு முன்பு, ‘இந்து தமிழ் திசை’க்கு செங்​கோட்​டையன் அளித்த நேர்​காணலில், “அதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்களை இணைப்பது தொடர்பான பேச்சு நடக்​கிறது” என உறுதிப்​படுத்​தி​யதுடன், இது தொடர்பாக முன்​னாள் அமைச்​சர்கள் - இபிஎஸ்சை சந்தித்தது உண்மை​தான் என்ப​தை​யும் தெளிவுபடுத்​தி​னார்.

“நீக்​கப்​பட்​ட​வர்​களைச் சேர்க்க வாய்ப்பே இல்லை. இதுவிஷமாக முன்​னாள் அமைச்​சர்கள் என்னை சந்திக்க​வில்லை” என்று பொது​வெளி​யில் மறுத்து வந்த இபிஎஸ்​சுக்கு, செங்​கோட்​டையனின் இந்த விளக்கம் தர்மசங்​கடத்தை ஏற்படுத்​தி​யது. இந்த நேர்​காணல் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்த நிலை​யில், தற்போது இபிஎஸ்​சுக்கு நடந்த பாராட்டு விழாவை செங்​கோட்​டையன் புறக்​கணித்​துள்ளார்.

இதற்கு, “எங்களை உருவாக்கிய தலைவர்​களான எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்கள் அழைப்​பிதழிலும், மேடை​யிலும் இல்லாத​தால், என் உணர்​வுகளை வெளிப்​படுத்​தும் வகையில், இந்த விழா​வில் பங்கேற்​க​வில்லை” என்று செங்​கோட்​டையன் விளக்கம் அளித்​துள்ளார். அதோடு, சென்னை​யில் நடந்த டெல்லி அதிமுக அலுவலக திறப்பு விழா நிகழ்​வை​யும் புறக்​கணித்து, தலைமைக்கு எதிரான தனது அதிருப்​தி​யை​யும் வெளிப்​படுத்தி இருக்​கிறார்.

தனது இந்த நடவடிக்கைகள் மூலம் செங்​கோட்​டையன் தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​யுள்​ளாரா அல்லது கட்சி தலைமைக்கு எதிராக தனது ஆவேசத்தை வெளிப்​படுத்​தி​யுள்​ளாரா என்பது தற்போதைய விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது. எம்ஜிஆர், ஜெயலலி​தாவை முன் நிறுத்தி, செங்​கோட்​டையன் எழுப்​பி​யிருக்​கும் இந்த ‘உரிமைக்​குரல்’ மாநிலம் முழு​வதும் உள்ள கட்சி நிர்​வாகிகள் மத்தி​யில், ‘உரத்த குரலாக’ பரவி, விவாதத்தை தொடங்கி வைத்​துள்ளது.

அத்திக்​கடவு - அவிநாசி திட்​டத்​திற்கு முதற்​கட்ட நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட போது பொதுப்​பணித்​துறை அமைச்​சராக இருந்த ஈரோடு கே.வி.​ராமலிங்​க​மும், இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்​கணித்​துள்ளதை​யும் இதில் கவனத்​தில் கொள்ள வேண்​டி​யுள்​ளது. கூடவே, இந்த நிகழ்வு தொடர்​பாக, டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர் ரகுப​தி​யின் கருத்து​கள், முன்​னாள் அமைச்சர் கோகுல இந்தி​ரா​வின் அதிருப்தி குரல் என பல தொடர்​வினைகள் வெளி​யாகி பரபரப்​புக்கு தூபம் போட்​டுள்​ளது.

இதற்கு நேரடியாக பதில் தராத இபிஎஸ், “அது கட்சி நிகழ்ச்சி அல்ல” என்ற எளிமையான ஒரு பதிலை ஜெயக்​கு​மார் மூலம் சொல்லி கடந்து போயிருக்​கிறார். செங்​கோட்​டையன் மனதில் என்ன இருக்​கிறது என்பதை அறிய ஈரோடு அதிமுக நிர்​வாகிகள் சிலரிடம் பேசினோம். “ஜெயலலிதா மறைவிற்கு பின் தன்னைத் தேடி வந்த தலைமை பதவியை தவிர்த்​தவர் செங்​கோட்​டையன்.

அவருக்​கும் இபிஎஸ்​சுக்​கும் இடையே, தற்போது சுமுக உறவு இல்லை என்பது உண்மை. முக்கிய முடிவுகளை எடுக்​கும் போது, இபிஎஸ் தன்னிடம் கலந்து கொள்​வ​தில்லை என்ற வருத்தம் தொடர்​கிறது. இதனால், சென்னை வரும்​போது, தலைமைக்​கழகத்​திற்கு செல்​வதைக்கூட தவிர்த்து விடு​கிறார்.

இந்த நிலை​யில், ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தல், ஈரோடு மாவட்ட அதிமுக நிர்​வாகிகள் நியமனம் போன்ற​வற்றில் கூட இவரின் கருத்​துக்கு உரிய முக்​கி​யத்துவம் கிடைக்க​வில்லை. அதோடு, இபிஎஸ்​சுக்கான பாராட்டு விழா தொடர்பாக எந்த தகவலை​யும் செங்​கோட்​டையனுக்கு முன்​கூட்​டியே தெரிவிக்க​வில்லை.

எஸ்.பி.வேலுமணி​யின் வழிகாட்டு​தலில், இபிஎஸ் புகழ்​பாடும் விழாவாக இந்த விழா ஏற்பாடு செய்​யப்​பட்​டது. விழா அழைப்​பிதழை பார்த்​தாலே அது தெரிய​வரும். இவற்றின் உச்ச​மாக, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை விழா மேடையி​லாவது சேர்க்க வேண்​டும் என தான் சொல்லி அனுப்​பி​யும், அதனை புறக்​கணித்​தது, கூடுதல் வருத்​தத்தை ஏற்படுத்​தி​ய​தால், விழா​வில் செங்​கோட்​டையன் பங்கேற்​க​வில்லை. இந்த காரணத்தை வெளிப்​படையாக தெரி​வித்த பிறகும், இபிஎஸ் அல்லது வேலுமணி போன்​றோர் அவரிடம் பேசி சமாதானப்​படுத்த இதுவரை முயற்சி எடுக்க​வில்லை.

இப்படி​யாக, அவருக்கு அதிருப்தி ஏற்படுத்​தும் பல சம்பவங்​கள், காரணங்கள் தொடர்ந்​தா​லும், இபிஎஸ்​சுக்கு எதிராக கொடி பிடிக்​கும் மனநிலை​யில் தற்போது செங்​கோட்​டையன் இல்லை. தன்னை அடையாளப்​படுத்திய கட்சி​யின் நலன் மட்டுமே அவருக்கு முதன்​மையாக உள்ளது.

அவர் அடுத்து என்ன நடவடிக்கை எடுத்​தா​லும், அது தனிப்​பட்ட தனது அதிருப்தி அல்லது ஆதா​யம் என்​ப​தைத் ​தாண்டி, கட்​சி​யின் நலன் ​சார்ந்​த​தாகவே இருக்​கும்” என்று தெரி​வித்​தனர் அவர்​கள். செங்​கோட்​டையன் தொடர்ந்து எரிமலையாக வெடிக்​கப் ​போகிறாரா அல்லது பனிமலை​யாய் உரு​கும் நேரத்​திற்காக ​காத்​திருக்​கப் ​போகிறாரா என்பது அவரது அடுத்​த அசைவுகளில்​ தெரிய வரும்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x