Published : 11 Feb 2025 06:56 PM
Last Updated : 11 Feb 2025 06:56 PM
மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தாமதம் ஆனதால், அதன் திட்ட மதிப்பீடு ரூ.313 கோடி உயர்ந்துள்ளது. இன்னும் பணிகள் நிறைவடையாததால் வரும் மார்ச் மாதத்தில் திட்டமிட்டபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாரா அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வரை மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டாக, போதிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், வைகை-1, வைகை-2, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து போதுமான குடிநீர் கிடைக்காததால் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1,295.76 கோடியில் முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் இன்னும் இந்த திட்டம் முடிக்கப்படவில்லை.
100 வார்டுகளிலும், இந்த புதிய திட்டத்திற்கான குடிநீர் இணைப்பு முழுமையடையவில்லை. மாநகராட்சி ஆணையாளர்களாக இருந்த மதுபாலன், தினேஷ்குமார் காலத்தில் ஓரளவு இந்த திட்டம் விரைவுப்படுத்தப்பட்டதால் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு, இந்த திட்டம் நிறைவுபெற்ற புறநகர் வார்டுகளில் வீடுகளுக்கு பரிசோதனை ஓட்டம் முறையில் விநியோகம் செய்து வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.
ஆனால், குடிநீர் திட்டம் திட்டமிட்டப்படி நிறைவு பெறாததால் கடந்த டிசம்பரில் முதலமைச்சர் தொடங்கி வைப்பதாக இருந்த இந்த திட்டம் தற்போது மார்ச் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் திட்டமிட்டப்படி மார்ச் மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பாரா அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது தெரியவில்லை.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ''புதிய ஆணையாளர் சித்ரா, கடந்த வாரம் அதிகாரிகளுடன் முல்லைப் பெரியாறு சென்று இந்த திட்டத்தை ஆய்வு செய்து திரும்பியுள்ளார். இந்த திட்டத்தை திட்டமிட்டப்படி மார்ச்சில் தொடங்கி வைக்க ஆர்வமாக உள்ளார். அதனால், அதற்கான இலக்கை நோக்கி மாநகராட்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டம், தாமதத்துக்கு 'கரோனா' தொற்று நோய் மிக முக்கிய காரணம். 4 சிப்பங்களாக 2020 மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. கோவிட் பரவலால் இந்த திட்டம் தொடங்குவதில் தாமதமானது.
வனத்துறையிடம் முதலில் இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. பின் தேர்வு செய்த லோயர் கேம்ப் இடத்தில் விவசாயிகளும், தலைமை நீரேற்று நிலையம் அமையும் பகுதியில் இருந்த சலவைத்தொழிலாளர்களும் போராட்டம் நடத்தினர். அதனால், தாமதமாக ஜூன் 2023-ம் ஆண்டு தலைமை நீரேற்று நிலையம் வேலை தொடங்கப்பட்டது. அவ்விடத்தில் கடிமான பாறைகள் இருந்ததால் 10 மீ ஆழம் பாறையை வெட்டி எடுக்க கூடுதல் காலமாகிவிட்டது. வைகை ஆற்றின் குறுக்கே (மதுரை பைபாஸ் ரோடு) குடிநீர் குழாய்கள் செல்வதற்கு கடந்த 2024ம் ஆண்டில் ஆகஸ்ட்டில்தான் நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆற்றுப்பகுதியில் திட்டம் செயலாக்க அனுமதியும் கிடைத்தது.
திட்டத்தின் சரக்கு மற்றும் சேவை வரி மாற்றம், ஒப்பந்த காலத்தில் விலை உயர்வு, தொழில்நுட்பக் காரணங்களுக்காக இத்திட்டத்துக்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1,609.69 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி கால திட்டமதிப்பை விட, ரூ.313 கோடி அதிகம். இதுபோன்ற தடைகளால் தாமதப்பட்டாலும், சிப்பம்-1, சிப்டம்-2 முடிக்கப்பட்டுள்ளது. சிப்பம்-3ல் மீதமுள்ள 4 மேல்நிலைத்தொட்டிகள் பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இப்பணிகளும் ஏப்ரலில் முழுமையாக நிறைவடைந்துவிடும். சிப்பம் 4-ல் குடிநீர் விநியோக குழாய்கள் 962 கி.மீ., முடிவு பெற்று 92,000 வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளில் 91,400 வீட்டு இணைப்புகள் வழங்கி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சிப்பம்-5 திட்டப்பணிகள் 2022 டிசம்பரில் 408.60 கோடிக்கு ஒப்பந்தமாகி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிப்பத்தின் ஒப்பந்தக்காரரின் பணி முடிக்கும் காலம் டிசம்பர் 2025 வரை உள்ளது. இந்த சிப்பத்தில் விநியோகக் குழாய்கள் 813 கி.மீ.,ல் 740 கி.மீ., முடிவு பெற்றுள்ளது. 1,63,958 வீட்டு இணைப்புகளில் 1,05,000 வீட்டு இணைப்புகள் வழங்கி சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT