Published : 11 Feb 2025 06:13 PM
Last Updated : 11 Feb 2025 06:13 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக் கல்வித் துறை முடிவு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
குறிப்பாக, கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மூவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
இதேபோல், திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியானதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மாணவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கக் கூடிய பள்ளிகளில் அரங்கேறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும், தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம் போன்ற கடும் நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதற்கிடையே, பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும், அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமென துறை இயக்குநர்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பள்ளி மாணவிகளுக்கு, கல்வியை கற்றுதரும் ஆசிரியர்களே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய போக்குகள் சரியானதல்ல. இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அதற்கு துறை ரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
இத்தகைய சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை(121) 2012-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. அதில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டாய ஒய்வு/பணிநீக்கம் போன்ற கடும் தண்டனைகள் வழங்கப்படும். ஆசிரியர்களை பொருத்தவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2) இதற்கு பொருந்தும். அதேபோல், சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த அரசாணை முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது அதை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆசிரியர்கள் மீதான புகார், அதன் உண்மைத்தன்மை, துறைரீதியான நடவடிக்கை, காவல் துறை நடவடிக்கை, விசாரணைக்குழு அறிக்கை, வழங்கப்பட்ட தண்டனை, நிலுவையில் உள்ளவை, பணியில் இருப்பவர்கள், ஒய்வு பெற்றவர்கள், தவறு நிரூபணமானவர்கள், பொய் புகார்கள் உட்பட அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித் துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது அரசாணை 121-ன் படி துறைரீதியாக பணிநீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கல்விச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும். விரைவில் அமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மார்ச் மாதமே இது அமலுக்கு கொண்டுவரப்படும்” என்று அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT