Last Updated : 11 Feb, 2025 05:57 PM

1  

Published : 11 Feb 2025 05:57 PM
Last Updated : 11 Feb 2025 05:57 PM

மருதூர் அணையில் இருந்து சிப்காட்டுக்கு தண்ணீர்? - தூத்துக்குடி விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மருதூர் அணைக்கட்டு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் இந்த முயற்சிக்கு, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தாமிரபரணி ஆற்றின் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகளில் இருந்து இருபுறமும் பிரியும் வாய்க்கால்கள் மூலமாக, 53 பாசன குளங்கள் நிரம்பி, சுமார் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுபோன்று, பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியான பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் நீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு விளங்குகிறது.

மழைக்காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை சேமித்திட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முப்போக சாகுபடி உரிமை பெற்ற விவசாயிகள், தற்போது ஒருபோக சாகுபடிக்கே போராடி தண்ணீர் பெரும் நிலையில் உள்ளனர்.

ஏற்கெனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20 எம்ஜிடி திட்டத்தில், தூத்துக்குடி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது, குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைப்பதில் நிலவும் பற்றாக்குறை காரணமாக, கடைமடை விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மருதூர் அணையில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்துள்ளனர். இதற்கு நீர்வளத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீர்வளத் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள், திருநெல்வேலி சிப்காட் தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித் துள்ளனர்.

இதுகுறித்து, சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவர் லூர்துமணி கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நீராதாரமாக மருதூர் அணை விளங்குகிறது. இதில் கடைமடை பகுதியாக விளங்கும் சாத்தான்குளம், உடன்குடி, புத்தன்தருவை, வைரவம்தருவை பகுதி குளங்கள், ஆண்டுதோறும் முழு கொள்ளளவை எட்ட முடியாத நிலையே நீடிக்கிறது.

கங்கைகொண்டான் சிப்காட் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மருதூர் அணையை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பார்வையிட்டதாக அறிகிறோம். விவசாயம் மற்றும் குடிநீருக்கே பற்றாக்குறை உள்ள நிலையில், சிப்காட் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சிக்கு நீர்வளத் துறையினர் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருப்பது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபகுதியின் வளர்ச்சி என்பது, மற்றொரு பகுதியின் வறட்சிக்கு காரணமாகி விடக்கூடாது. விவசாயம், குடிநீர், கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையில், விவசாயத்தைக் அழித்து தொழிற்சாலைகளை வாழ வைக்கக் கூடாது. மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்த பிறகு, தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் வறட்சியான பகுதியில் உள்ள விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து கடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

பொருநை நதிநீர் மேலாண்மை சங்கத் தலைவர் கண்ணன் கூறியதாவது: மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் மூலம் 29 குளங்கள் வழியாக, 19,500 ஏக்கர் நிலங்களுக்கு, 1995-ம் ஆண்டு முதல் முப்போகம் உரிமை பெற்றுள்ளோம். ஆனால், தண்ணீர்‌ பற்றாக்குறை காரணமாக அந்த உரிமையை இழந்து, தற்போது மானாவாரி நிலம் போல் ஒரு போக சாகுபடிக்கு மட்டும்தான் தண்ணீர் கிடைக்கிறது.

இப்பகுதிகளில் ஜூன் முதல் நவம்பர் வரை கார் சாகுபடி செய்யப்படுவதில்லை. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்தான் மருதூர் மேலக்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனை, பொதுப்பணித்துறை ஆவணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்கெனவே, தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவை என்ற பெயரில், நான்காவது பைப்லைன் திட்டத்தின் மூலம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், மருதூர் அணையில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த குடிநீர் திட்டத்துக்கு ஏற்கெனவே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தற்போது, கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைக்கும், தூத்துக்குடி கார் தொழிற்சாலைக்கும் மருதூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டால், ஒரு போக சாகுபடி கூட விளைய முடியாமல் போய்விடும். குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x