Published : 11 Feb 2025 09:27 AM
Last Updated : 11 Feb 2025 09:27 AM
சென்னை: “உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
முருகக் கடவுளைக் கொண்டாடவும் வழிபடவும் பல விழாக்கள் இருக்கின்றன. விசேஷங்கள் ஏராளம் அமைந்துள்ளன. ஆடிக் கிருத்திகையும், ஐப்பசி சஷ்டியும், வைகாசி விசாகமும், பங்குனி உத்திரமும் என முருகப்பெருமானுக்கு திருவிழாக்கள் ஏராளம். இந்த விழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.
தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
உலகெங்கும் உள்ள முருகக் கடவுளின் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூகவலைதளத்தில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” எனப் பதவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் பேசிய விஜய், “பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதே இல்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதே எங்களுடைய நிலைப்பாடு.” என்று கூறியிருந்தார். அதற்கேற்ப விஜய் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT