Published : 11 Feb 2025 09:16 AM
Last Updated : 11 Feb 2025 09:16 AM
அரசியல் கட்சியை தொடங்கி ஆர்ப்பாட்டமாய் வருடம் ஒன்றைக் கடந்திருக்கும் நடிகர் விஜய், மாவட்ட வாரியாக கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் முழுமூச்சாய் இருக்கிறார். தமிழகத்தில் கிட்டத்தட்ட கட்சி அமைப்பை கட்டமைத்து விட்ட விஜய், அடுத்தகட்டமாக புதுச்சேரிப் பக்கம் பார்வையை திருப்ப விருப்பதாகச் சொல்கிறார்கள்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியானது தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களை ஒட்டி நான்கு பிரதேசங்களாக உள்ளது. இதில் பெரும்பகுதி தமிழகத்தையொட்டி உள்ளது. இருப்பினும் தமிழக அரசியலின் தாக்கம் புதுச்சேரியில் பெரும்பாலும் எதிரொலிப்பதில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே இல்லை.
ஆனால் புதுச்சேரியில், நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வருகிறது. இப்போது கூட காங்கிரஸில் இருந்து பிரிந்த ரங்கசாமி தான் பாஜக-வுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி நடத்துகிறார். தமிழகம் பெரிய மாநிலம் என்பதால் கட்சி மற்றும் தலைவர்களின் செல்வாக்கு, ஆட்சிக்கு எதிரான - ஆதரவான மக்களின் மனநிலை உள்ளிட்டவை வாக்குகளைத் தீர்மானிக்கும். ஆனால் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில், ஒரு தொகுதிக்கான வாக்காளர் எண்ணிக்கை என்பது 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.
இதனால், மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற பிரபலங்களே இங்கு பெரும்பாலும் எம்எல்ஏ-க்களாக வெற்றி பெறுகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல், கட்சி வேறுபாடுகளைக் கடந்து வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்து அவர்களுக்கு சீட் கொடுத்து எம்எல்ஏ-க்களாக்கி அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது தான் புதுச்சேரி ஸ்டைல். தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் சினிமா கவர்ச்சி மூலமே அரசியலில் தாங்கள் நினைத்ததை சாதித்தார்கள். ஆனால், புதுச்சேரி அரசியல் களத்தில் அப்படியான சினிமா கவர்ச்சிக்கெல்லாம் வேலை இல்லை.
இருந்த போதும், தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தடம்பதிக்க நினைக்கும் தவெக அதற்கான முயற்சிகளையும் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்துக்கு முதல்வர் வேட்பாளர் விஜய், புதுச்சேரிக்கு புஸ்ஸி ஆனந்த் என்று முதலில் பேச்சு அடிபட்டது. ஆனந்த் ஏற்கெனவே இங்கு எம்எல்ஏ-வாக இருந்தவர் என்பதும் இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால், அண்மையில் தனது வாக்கை புஸ்ஸி ஆனந்த் தமிழகத்தின் சோளிங்கர் தொகுதிக்கு மாற்றிவிட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படியானால், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை இங்கு முன்னிறுத்தலாம் என்ற பேச்சுக் கிளம்பியது. மார்ட்டின் மருமகன் ஆதவ் ஆர்ஜுனா தவெக-வில் இணைந்த பிறகு இந்தப் பேச்சு இன்னும் பலமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது.
தேர்தலைக் குறிவைத்து சார்லஸும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுக்கு நல உதவிகளை வழங்கி வருகிறார். விஜய்யும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நல்ல நட்பில் இருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் கசப்பான அனுபவங்களைச் சந்தித்து வரும் ரங்கசாமி, 2026 தேர்தலுக்கு கூட்டணி மாறும் யோசனையில் இருக்கிறார்.
ஒருவேளை, விஜய்யுடனான கூட்டணி செட்டானால் என்.ஆர்.காங்கிரஸ் - தவெக கூட்டணி அமையலாம் என்கிறார்கள். இது பற்றி பேசிய புதுச்சேரி தவெக-வினர், “தமிழகத்தில் கட்சியை கட்டமைக்கும் வேலைகளில் தலைவர் விஜய் தற்போது மும்முரமாக இருக்கிறார்.
அங்கே கட்சிப் பொறுப்பாளர்களை நியமித்து முடித்த பிறகுதான் புதுச்சேரி வேலைகளை தொடங்குவார் எனச் சொல்லி இருக்கிறார்கள். இருப்பினும் இப்போதைக்கு அந்தந்த தொகுதிகளில் மக்களுக்கான நல உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்திலேயே கூட்டணிக்கு தயார் எனச் சொல்லி இருக்கும் தலைவர், புதுச்சேரியிலும் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலைச் சந்திப்பார்.
புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரசுடன் திமுக இருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை, தமிழகத்தில் அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் இங்கேயும் அந்தக் கூட்டணி அமையும். அப்படி இல்லாதபட்சத்தில் பாஜகவை விலக்கிவிட்டு வந்தால் ரங்கசாமியுடன் கூட்டணி அமைக்க எங்களுக்கு தயக்கம் இருக்காது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT