Published : 11 Feb 2025 01:13 AM
Last Updated : 11 Feb 2025 01:13 AM

தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?

வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றி இலக்காக வைத்து தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணியாற்றி வருகிறது. அக்கட்சியின் தேர்தல் வியூக பணிகளை ஜான் ஆரோக்கியசாமி கவனித்து வருகிறார். கட்சியில் புதிதாக இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்த குழுவில் ஆதவ் அர்ஜுனா பணியாற்றிய அனுபவம் உள்ள நிலையில், தற்போது தவெக கட்சிக்கும் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியிலும் மும்முரம் காட்டி வருகிறார். இதற்கிடையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் - விஜய் இடையிலான நேரடி சந்திப்புக்கு ஆதவ் அர்ஜுனா சில நாட்களாக தீவிர முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். ஏற்கெனவே, தவெகவின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என விஜய் கூறியுள்ள நிலையில், தவெகவின் கூட்டணி தொடர்பான வியூகங்களை வகுத்து கொடுப்பது தொடர்பான விஷயங்கள் இந்த சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம், எந்த மாதிரியான வியூகங்களை வகுக்கலாம், எதுபோன்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம், எந்த பிரச்சினையை கையில் எடுக்கலாம், எதுபோன்ற விஷயங்களுக்கு களத்தில் இறங்கி போராடலாம், அடுத்தமாதம் தொடங்க இருக்கும் சுற்றுப்பயணத்தில் எதை முன்னிருத்தி எங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கலாம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர். பின்னர் விஜய்யும், பிரசாத் கிஷோரும் தனியாக சிறிது நேரம் ஆலோசித்துள்ளனர்.

பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து திமுகவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தனது ஐபேக் நிறுவனம் மூலம் வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக வியூகங்களை வகுக்க அதிமுக சார்பில் பிரசாத் கிஷோரை பேசி முடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய், பிரசாந்த் கிஷோர் இடையிலான சந்திப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேநேரம், தேசிய அளவில் வியூகம் அமைப்பதில் வல்லவர் என பெயர் பெற்ற பிரசாந்த் கிஷோர், 2026 சட்டப்பேரவை தேர்தலில், தவெகவுக்காக முழுநேர தேர்தல் பணிகளை மேற்கொள்வாரா அல்லது ஒரு சில ஆலோசனைகளை மட்டும் வழங்குவாரா என போகப்போக தான் தெரியும் என தவெகவினர் தெரிவித்தனர். இருப்பினும், விஜய்யுடன் முன்னணி தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x