Published : 11 Feb 2025 01:02 AM
Last Updated : 11 Feb 2025 01:02 AM
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, இம்மாதம் இறுதியில் சென்னையில் ஒருநாள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. பாமகவின் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி பொதுச்செயலாளர் சமரசம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் போராட்டத்தை சென்னையில் நடத்தவும், திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: இந்தியாவில் பிஹார், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக முதல்வர் கூறுவது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம். விசாரணைக்கு வரும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா? என்று கேள்வி எழுப்புவார்கள். நடத்தவில்லை என்று அரசு தெரிவிக்கும்பட்சத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு வழங்கினால், தமிழகத்தில் என்ன நடக்கும்? தீர்ப்பு வழங்கிய அடுத்த நாளே திமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். தமிழகம் கலவர பூமியாக மாறும்.
எனவே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி, சென்னையில் இந்த மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அதன்பிறகும், அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT