Published : 10 Feb 2025 01:04 PM
Last Updated : 10 Feb 2025 01:04 PM
சென்னை: “கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பில் சர்வ கட்சியினரும் உள்ளனர், எனவே அந்த நிகழ்ச்சியை அப்படித்தான் பார்க்க வேண்டும்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது, மற்றும் அவரது விளக்கும் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம். அவரால் அரசிதழில் வெளியிடப்பட்ட திட்டம். அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த திட்டத்தின் 80 சதவீத பணிகள், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலேயே முடிவுற்றது.
எஞ்சியிருந்த 20 சதவீத பணிகளை, ஆளும் இந்த ஸ்டாலின் மாடல் அரசாங்கம் மெத்தனமாக மேற்கொண்டனர். திட்டப் பணிகளை உடனடியாக மேற்கொண்டால், அதிமுகவுக்கு நற்பெயர் வந்துவிடும் என்ற காரணத்துக்காக, திட்டப்பணிகளை கிடப்பிலே போட்டு 3 வருடங்கள் கழித்து திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். இத்திட்டம் நிறைவேறியதற்கு உண்மையான காரணம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்தான். கோவையில் நடந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இந்த விவசாய கூட்டமைப்பில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளும் அதில் உள்ளனர்.
அந்த திட்டத்துக்காக போராடியவர்கள், சிறை சென்றவர்கள், உண்ணாவிரதம் இருந்தவர்கள் என பலரும் அந்த சங்கத்தில் உள்ளனர். காரணம், ஐம்பதாண்டு கால கனவுத்திட்டம் அது. எனவே, விவசாயிகள் சங்கத்தில் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, இதில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்ற வகையில்தான், அந்த கூட்டமே நடத்தப்பட்டது. எனவே இந்த நிகழ்ச்சியை அப்படித்தான் பார்க்க வேண்டும்.
அந்த நிகழ்ச்சியை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகள் கூட்டமைப்பு தான் ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் கூட்டமைப்பில் சர்வ கட்சியினரும் உள்ளனர், என்ற வகையில்தான் அதைப் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT