Published : 10 Feb 2025 11:59 AM
Last Updated : 10 Feb 2025 11:59 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, வி.சி.சந்திரகுமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், இதுவரை இல்லாத அளவு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது திமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT