Published : 10 Feb 2025 01:26 AM
Last Updated : 10 Feb 2025 01:26 AM
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழக மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பன்மைத்துவத்துக்கும், மதநல்லிணக்கத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழகமாகும். இங்குள்ள பழனியாண்டவர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மதவேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.
இத்தகைய, தமிழகத்தில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பாஜகவும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. பாஜகவின் தேர்தல் அறுவடைக்காக தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன. ஆனால் தமிழகத்தின் நலன்களுக்கான சொல்லிக் கொள்ளும்படி எதையும் மத்திய பாஜக அரசு செய்யவில்லை.
இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும் அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும், மலையின் தென்புறத்தில் காசி விஸ்வநாதர் கோயிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோயிலும் அமைந்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
முன்னோர்கள் காலத்தில் இருந்தே முருகன் கோயிலில் பூசைகளும், சிக்கந்தர் தர்காவில் அவ்வப்போது ஆடு, கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்தி அன்னதானம் (கந்தூரி) செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பாஜக, ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. முருகன் கோயிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி சமூக வலைதளங்களில் மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன.
இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டது. மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க திருப்பரங்குன்றம் மக்கள் இப்போதுபோல் எப்போதும் உறுதிகாட்ட வேண்டும். தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு, அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT