Last Updated : 09 Feb, 2025 11:47 PM

1  

Published : 09 Feb 2025 11:47 PM
Last Updated : 09 Feb 2025 11:47 PM

“என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது” - இபிஎஸ் உறுதி

கோவையை அடுத்த அன்னூர் கஞ்சபள்ளியில் நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நினைவுப் பரிசு வழங்கிய விவசாயிகள். படம்: ஜெ.மனோகரன். 

கோவை: என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,916 கோடியில், கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரம்பி இருப்பதால் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள், அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற காரணமாக இருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக பாராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பரத நாட்டியம், கம்பத்து ஆட்டம், வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுகிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலத்தில் இருந்து கார் மூலம் அன்னூர் கஞ்சப்பள்ளி வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு விவசாயிகள், பொதுமக்கள், கட்சியினர் வழிநெடுகிலும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காரில் இருந்து இறங்கிய பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் சேர்ந்து மாட்டு வண்டியில் பயணித்து விழா மேடைக்கு வந்தார். அவருக்கு விவசாயிகள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பல வகை தானியங்கள், காய்கறிகள், தேங்காய், வாழைத்தார் உள்ளிட்ட பழங்கள் உள்ளிட்டவைகளை மங்கள வாத்தியம் முழங்க பெண்கள் பாத்திரங்களில் சீர் வரிசை பொருட்களை கொண்டு வந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வழங்கினர்.

இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: “நான் ஒரு விவசாயி என்ற முறையில் நன்றி பாராட்டு விழாவை ஏற்றுக் கொள்கிறேன். இத்திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை அடைந்துவிட்டேன்.
நான் முதல்வர் ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் உத்தரவிடும் இடத்திற்கு வந்துவிட்டதால் இத்திட்டம் எளிதாக வந்தது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 60 ஆண்டு கால கனவை நனவாக்கிய அரசு அதிமுக. நான் இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல செயல்படுவேன். பணத்தாலோ, புகழாலோ என்னை யாராலும் அடிமைப்படுத்த முடியாது.
இத்திட்டத்திற்கு கடந்த 2018-ல் ரூ.1652 கோடியில் அரசாணை வெளியிடப்பட்டது. 60 ஆண்டு கால போராடி வரும் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் மாநில அரசு நிதியில் செயல்படுத்த உத்தரவிட்டேன்.

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் எடுத்த எல் அன்ட் டி நிறுவனம் மூலம் 85 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டன. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினையால் காலதாமதம் ஆனது. 15 சதவீத பணியை ஓராண்டில் செய்திருக்கலாம். அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக கிடப்பில் போட்டு காலதாமதமாக தொடங்கி வைத்துள்ளனர்.

மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை மாறி வரும் அரசு தொடர வேண்டும். அவர்களும் திட்டம் கொண்டு வர மாட்டார்கள். தமிழகத்தில் திறமையற்ற அரசு ஆட்சி செய்து வருகிறது. இத்திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் தேவை. இதில் 1,045 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. தானியங்கி மூலம் ஏரியில் நீர் நிரப்பப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 6 கதவணை தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6 தடுப்பணைகள் கட்டும் பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
குடிமராமத்து திட்டம் மூலம் 6,000 பொதுப்பணித்துறை ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டன. மழை காலத்தில் வரும் நீர் ஏரி, குளங்களில் சேகரிக்கப்பட்டது.

அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை வந்தது. இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. உங்களால் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். அதிமுக ஆட்சிக்கு வரும் போது அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டம் எவ்வித தடை இல்லாமல் நிறைவேற்றப்படும்.

பயிர் காப்பீடு திட்டம் மூலம் 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,600 கோடி இழப்பீடு பெற்று தரப்பட்டது. வறட்சி காலத்தில் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.2,240 கோடியை இழப்பீடு தொகையாக வறட்சி நிவாரணமாக வழங்கியது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.12,100 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்தது.

50 ஆண்டு கால காவிரி நதிநீர் பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு பெற்று தந்தது அதிமுக.
முதல்வர் ஸ்டாலின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை பாதுகாத்தோம். அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்க தடுப்பணை கட்டப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகமாக தடுப்பணை கட்டுவோம் என கூறினார்கள். ஆனால், எந்த தடுப்பணையும் கட்டவில்லை. ஆனைமலையாறு - நல்லாறு, பாண்டியாறு-புன்னம்புழா போன்ற திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கு வரும் போது நிறைவேற்றப்படும்.

காவிரி நதி நீர் அசுத்தம் செய்யும் நடந்தாய் வாழி காவிரி திட்டம் ரூ.14,000 கோடியில் திட்டத்தை பிரதமரிடம் வழங்கினோம். அத்திட்டம் குறித்து குடியரசு தலைவர் உரையில் இடம் பெற செய்தார். ஆட்சி மாறியதால் அத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் பிரதமரிடம் வழங்கினோம். தெலுங்கானா மற்றும் ஆந்திரா முதல்வர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்தோம்.

திமுக அரசு நீர் மேலாண்மைக்கு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது இல்லை. மக்கள் மற்ரும் விவசாய விரோத ஆட்சி நடந்து வருகிறது. தென்னை மர விவசாயிகள் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைப்பற்றி கவலைப்படாத முதல்வர் ஸ்டாலின். தென்னை நார் தொழிற்சாலை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முறையாக நிறைவேற்றவில்லை. மூன்று ஆண்டு காலம் கழித்து தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்" இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

விழாவில் எஸ்.பி.வேலுமணி பேசும்போது: "அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு முழுமையாகநிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். இத்திட்டத்திற்கு யாரும் சொந்த கொண்டாட முடியாது. நாராணயசாமி நாயுடு, காளிங்கராயன் மணி மண்டபத்தை கட்டி கொடுத்தவர் பழனிசாமி. விடுபட்ட குளங்களுக்கு அத்திக்கடவு-அவிநாசி 2-வது திட்டத்தை கொண்டு வருவார். அடுத்த ஓராண்டில் பழனிசாமி முதல்வராக வருவார்" என்றார்.

விழாவில் இறுதியாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பவானி என்ற பசு மாடு, கன்றுக்குட்டியுடன் மாட்டு வண்டியை விவசாயிகள் பரிசாக வழங்கினர். விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் நடராஜன், கணேஷ், சம்பத், பெரியசாமி, ரவிகுமார் மற்றும் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மற்றும் பொதுமக்கள், கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x