Last Updated : 08 Feb, 2025 02:37 PM

 

Published : 08 Feb 2025 02:37 PM
Last Updated : 08 Feb 2025 02:37 PM

“ஏமாற்றப்படும் நடுத்தர மக்கள்!” - சென்னையில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் டி.ராஜா ஆவேசம்

டி.ராஜா | கோப்புப்படம்

சென்னை: “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை, பாரிமுனையில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது.

நடுத்தர மக்களுக்கு ஆதரவு என்று கூறுவது நடுத்தர மக்களை ஏமாற்றும் செயலாகும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு கடன் அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை பிரச்சினைகளை இந்த பட்ஜெட் ஒருவகையிலும் அணுகவில்லை. எனவே, இதைக் கண்டித்துதான் தமிழகம் முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், தமிழக அரசு நிதி கேட்கும் போது அதை தர மத்திய அரசு மறுக்கிறது. அத்துடன், தமிழகத்துக்கு எதிராக பல்வேறு முடிவுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த பட்ஜெட் தமிழகத்துக்கு மட்டுமின்றி ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் தொழிலதிபர்களுக்கும் சாதகமான பட்ஜெட். எனவே, இந்த பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளன.
காப்பீட்டுத் துறையில் கூட இன்றைக்கு 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம், அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயம் தான் வளர்ச்சியின் இயந்திரம் என்று கூறினார். ஆனால், இன்றைக்கு விவசாயிகள் படுமோசமான நிலையில் உள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்துவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால், விவசாயிகள் இன்றைக்கும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆனால், அது கொடுக்கப்படவில்லை.கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது, நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

அதேபோல், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இல்லை,” என்று அவர் கூறினார். இப்போராட்டத்தில், கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x