Last Updated : 07 Feb, 2025 04:30 PM

2  

Published : 07 Feb 2025 04:30 PM
Last Updated : 07 Feb 2025 04:30 PM

“இந்தியாவை அவமதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...” - ‘கைவிலங்கு’ விவகாரத்தில் டி.ராஜா கருத்து

டி.ராஜா | கோப்புப் படம்

சென்னை: ‘‘அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அதிபர் ட்ரம்ப் அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல் உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து டி.ராஜா சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. கட்சியின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 21 முதல் 25 வரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ளது. அம்பேத்கருக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ் பேசி வருகின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து மத ரீதியான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன.

இந்திய பொருளாதாரம் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது. பெரு முதலாளிகளிடம் பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி, பணவீக்கம் அதிகரித்து உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. அந்நிய செலாவணி கடன் அதிகரித்து உள்ளது.

இந்த பட்ஜெட் ஏழைகளை வஞ்சித்துள்ளது. பட்ஜெட்டை எதிர்த்து நாடு போராட்டம் நடத்தி வருகிறோம். வரும் 14 முதல் 20 -ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் மக்களை சந்திக்கும் பேரியக்கம் நடத்தப்படும். மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை சமூக நீதி, சமத்துவம், பாஜக அரசிலிருந்து மக்களை காப்பதற்காக அரசியல் சித்தாந்த பேரியக்கத்தை நடத்த உள்ளோம்.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் காலில் சங்கிலியால் கட்டி விமானத்தில் அழைத்து வரப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை அவமானப்படுத்தியது, இந்தியாவை அவமானப்படுத்தியது போல் ஆகும். இந்தியா இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை எந்த பகுதியில் நடைபெற்று இருந்தாலும் அதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும் என்பது மத்திய தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது. எல்லா மாநிலங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்திலும் இது வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று டி.ராஜா கூறினார். இச்சந்திப்பின் போது, கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் பெரியசாமி, வீரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x