Published : 07 Feb 2025 01:54 PM
Last Updated : 07 Feb 2025 01:54 PM
புதுச்சேரி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் போட்டியிடும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கிழக்கு கடற்கரைச்சாலையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனரும், முதல்வருமான ரங்கசாமி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அதையடுத்து கட்சி அலுவலகத்தில் அப்பா பைத்தியம் சுவாமி படத்துக்கு மலர் தூவி பூஜை செய்தார்.
பின்னர் கட்சித்தொண்டர்களிடம் பேசியதாவது: சத்குரு அப்பா பைத்தியம் சாமி, சத்குரு அழுக்குச்சாமி ஆசியால் கட்சித்தொடங்கப்பட்டது. கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து நடத்தி வருகிறோம், ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது; கடந்த ஆட்சியில் செயல்படுத்தாததை தற்போது தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு செயல்படுத்தி வருகிறது.
மீண்டும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். இதற்காக இன்று முதல் அயராது பாடுபட வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எல்லா துறைகளிலும் உள்ள அரசு காலிப்பணியிடங்களை, அரசு நிரப்பி வருகிறது. விரைவில் மின்துறையிலும் காலி பணியிடம் நிரப்பவுள்ளோம். உள்கட்டமைப்பின் தனி கவனம் செலுத்தி வருகிறோம்.
பெஞ்சல் புயல் நிவாரணம் அறிவித்ததுடன் கொடுத்து உள்ளோம். உங்களது குறைகளையும் எடுத்துக்கொண்டு, அதை சரி செய்து கொடுப்போம். அப்பா பைத்தியம் சாமி ஆசியால், நமது ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 11 தொகுதிகளில், கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொகுதிகளில் விரைவில் தேர்வு செய்யப்படும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்திலும் என்.ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். இது நமது கட்சியினுடைய வளர்ச்சி. மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை. மீண்டும் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT