Published : 06 Feb 2025 06:06 PM
Last Updated : 06 Feb 2025 06:06 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கட்சிகள் புறக்கணித்தும் குறையாத வாக்கு சதவீதம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உற்சாகத்தோடு வாக்களித்த வாக்காளர்கள் | படங்கள்: எஸ்.குருபிரசாத்

ஈரோடு: அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் புறக்கணிப்பு, 4-வது ஆண்டில் மூன்றாவது தேர்தல் போன்ற காரணங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்துடன் இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்னர். இதனை 67.97சதவீத வாக்குப்பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடந்தது.இந்த தேர்தலின்போது வாக்காளர்கள் பட்டியில் அடைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு தொடங்கி பணம், பரிசுப்பொருள் விநியோகம் என ஈரோடு கிழக்கு திருவிழா கோலம் பூண்டது. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்களின் பிரச்சாரத்தால் இடைத்தேர்தல் களை கட்டியது. இந்த இடைத்தேர்தலில், 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இருமுனைப் போட்டி: அதற்கு நேர்மாறாக தற்போதைய இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு மாவட்ட அமைச்சரான முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் பிரச்சாரம் செய்தனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்த கடும் விமர்சனங்களை முன் வைத்து இந்த தேர்தல் களத்தை அணுகினார்.

இந்த நிலையில், அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், அவர்களின் தொண்டர்கள், நிர்வாகிகள் வாக்குகளைப் பதிவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், கடந்த இடைத்தேர்தலைப் போலவே, இந்த இடைத்தேர்தலிலும், தேர்தலை புறக்கணித்த கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளது வாக்குப்பதிவு சதவீதம் மூலம் நிரூபணமாகி உள்ளது.

கடந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் (9 மணிக்கு) 10.10 சதவீதம், 11 மணிக்கு 27.89, 1 மணிக்கு 44.56, 3 மணிக்கு 59.22, மாலை 5 மணிக்கு 70.58 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நிறைவில், 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதே நேரத்தில் நேற்று நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவில், காலை 9 மணிக்கு 10.95 சதவீதமும், 11 மணிக்கு 26.03 சதவீதமும், பகல் 1 மணிக்கு 42.41, மாலை 3 மணிக்கு 53.63, மாலை 5 மணிக்கு 64.02 சதவீதமும், வாக்குபதிவு நிறைவில் 67.97 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் 77.58, 2016-ல் 69.57, 2021 பொதுத்தேர்தலில் 66.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2023-ம் ஆண்டு இடைத்தேர்தலில் 74.79 சதவீதமும், கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 66.40 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில், நேற்றைய வாக்குப்பதிவில் 67.97 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. ஈரோடு வாக்காளர்களின் இந்த உற்சாகம் யாருக்கு சாதகமாக அமையும் என்பது 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x