Published : 05 Feb 2025 09:49 PM
Last Updated : 05 Feb 2025 09:49 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தேசிய நெடுஞ்சாலை அருகே மருத்துவ கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியின் புறநகர் பகுதியான முக்கூடல் மற்றும் சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் கடந்த சில வாரங்களுக்குமுன் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து, மருத்துவ கழிவுகளை கேரள அரசு முழுமையாக அகற்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து லாரிகளில் மருத்துவ கழிவுகள் அள்ளி எடுத்து செல்லப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டியில் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது குறித்து தெரியவந்தது. காலாவதியான மாத்திரை, டானிக் உள்ளிட்டவை அதிகமாக அங்கு கொட்டப்பட்டிருந்தன. மேலும் அந்த மருத்துவ கழிவுகளை தீயிட்டு எரித்துள்ளனர். ஆனால் பாதியளவுக்கே கழிவுகள் எரிந்திருந்தன.
மருத்துவ கழிவுகளை சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி முறைப்படி அகற்ற வேண்டும். பொது இடங்களில் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி அருகே மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவ கழிவுகளை அகற்றவும், அதை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் என்.ஒ. சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் ராஜகோபாலபுரம் சர்வீஸ் சாலையிலிருந்து சிவத்திபட்டி செல்லும் சாலைக்கு முன்புள்ள மண்சாலையில் தனியாருக்கு சொந்தமான காலிமனையில் 325 கிலோ எடையுள்ள காலாவதியான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.
இது குறித்து தெரியவந்ததும் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று இந்த கழிவுகளை அப்புறப்படுத்தி, கிருமி நாசினி தெளித்தனர். இந்த மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT